காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பயிற்சிக்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.678 கோடி நிதி, பதக்கங்களாக மாறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ்.கில், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சியளிக்க ரூ.678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இவ்வளவு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்றார்.
வீரர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அயல்நாட்டில் இருந்து 20 பயிற்சியாளர்களை நியமித்துள்ளோம். விளையாட்டுத் துறையால் வீரர்களுக்கு பயிற்சி மட்டுமே வழங்க முடியும். அதனைப் பயன்படுத்தி பதக்கங்களை வெல்வது வீரர்களின் திறமையாகும். அந்த வகையில் 2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் நடைபெறும் காமன் வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்வார்கள் என நம்புகிறேன் என்றார். |