சிங்கப்பூரில் நடைபெற்றுவந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளான இன்று 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் வீரரும், வீராங்கனையும் சிறப்பாக ஓடி தங்கங்களை வென்றனர்.
இந்திய வீரர் - 11வது வகுப்பு மாணவர் இரவிக் குமார் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பந்தய தூரத்தை 1 நிமிடம் 55.91 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஈரானின் அமீர் மிக நெருக்கமாக வந்து வெள்ளியையும், சிறிலங்காவின் ஹெராத் வெங்கலமும் வென்றனர்.
மகளிர் பிரிவு 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் நமீதா காபாட் பந்தய தூரத்தை 2நிமிடம் 15.55 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். வியட்நாமின் தின் தான் வெள்ளியையும், மியான்மரின் மியின்ட் ஸ்வே லீ வெங்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இந்தப் போட்டிகளில் இந்திய அணி 12 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கியது. மொத்தத்தில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெங்கல பதக்கங்களை வென்றுள்ளது. |