தோற்றுவிடுவாரோ என்ற நிலையில் இருந்த போட்டியில், மீண்டு எழுந்து, திறம்பட ஆடி, போராடி வென்று விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் இறுதிக்கு முன்னேறினார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 4வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் எலீனா டீமண்டீவாவுடன் மோதினார் செரீனா வில்லியம்ஸ் (2).
ஆட்டத்தின் முதல் செட்டிலியே கடும் போட்டி துவங்கியது. செரீனாவின் முதல் சர்வையே உடைத்தார் டீமண்டீவா. இருந்தபோதிலும், முதல் செட் டை-பிரேக்கருக்குச் சென்றது.
டை-பிரேக்கரில் சிறப்பாக ஆடி 7-4 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதல் செட்டை கைப்பற்றினார் டீமண்டீவா.
2வது செட்டும் டை-பிரேக்கருக்குச் செல்ல இருந்த நிலையில், டீமண்டீவாவின் சர்வை உடைத்து 7-5 என்று கைப்பற்றினார் செரீனா.
இறுதி செட்டில் செரீனாவின் சர்வை உடைத்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் டீமண்டீவா. ஆனால், மனம் தளராத செரீனா, டீமண்டீவாவின் சர்வை உடைத்து, தனது சர்வை தக்கவைத்து 3-3 என்ற சமநிலைக்கு வந்தார்.
5-4 என்று முன்னிலை பெற்றிருந்த நிலையில், செரீனாவின் சர்வை உடைத்து வென்றுவிடுவார் டீமண்டீவா என்ற நிலை உருவானது. ஆட்டம் டியூசுக்கும், அட்வான்டேஜுக்குமாக மாறி மாறி கடைசியில் செரீனா வென்று 5-5 என்ற நிலைக்கு வந்தது.
பிறகு இருவரும் தங்களது சர்வை தக்கவைத்துக் கொண்டனர். 6-6 என்ற நிலை உருவானது. இறுதி செட் என்பதால் டை-பிரேக்கர் இல்லை. ஆட்டம் தொடர்ந்தது.
அதுவரை போராட்டமாக எதிர்கொண்ட செரீனா, திடீரென அபாரமாக விளையாடி டீமண்டீவா சர்வை உடைத்து 7-6 என்று முன்னிலை பெற்றார். ஆட்டம் திரும்பியது. டீமண்டீவா தன்னம்பிக்கை இழந்தார். தனது சர்வ்களை எந்தவித பதற்றமும் இல்லாமல் அடித்து 8-6 என்ற செட் கணக்கில் வென்றார் செரீனா.
செரீனா வில்லியம்ஸ் செய்த தவறுகளே (Unforced Errors) வெற்றி பெற போராட வேண்டிய நிலைக்கு அவரைத் தள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் மட்டும் செரீனா வில்லியம்ஸ் 20 ஏஸ்களை விளாசினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. |