லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட்டை 6ஆம் நிலையில் உள்ள அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் 6-3, 6-7, 7-6, 4-6, 6-4 என்ற செட்களில் பொராடி வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதியில் ரோடிக், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயை சந்திக்கிறார்.
நேற்றைய ஆட்டத்தில் அதிரடி சர்விற்கு பெயர் பெற்ற ஆன்டி ரோடிக் மணிக்கு 140கி.மீ வேகத்தில் சர்வ்களை அடித்ததோடு அதில் 43 சர்வ்களை ஏஸ்களாக விளாசினார். ஹூவிட்டும் சளைத்தவர் இல்லை என்றாலும் அவரால் 21 ஏஸ்களையே போட முடிந்தது.
முதல் செட்டில் முக்கிய கட்டத்தில் ஹூவிட் இரண்டு டபுள் ஃபால்ட்களை செய்ய அந்த செட்டை 6- 3 என்று ரோடிக் வென்றார். இரண்டாவது செட்டில் ஹூவிட் முதலில் 3- 1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் 3 சர்வ்கேம்கள் கழித்து ரோடிக் மீண்டும் பிரேக் செய்தார். ஆட்டம் டை ப்ரேக் நிலைக்கு சென்றது அதில் ரோடிக் 5- 2 என்று முன்னிலை பெற்றார்.
அதன் பிறகு 6- 5 என்று ஹூவிட்டிற்கு சாதகமான நிலை இருந்தது பிறகு ரோடிக் அடித்த இரண்டு ஷாட்கள் நெட்டில் பட்டு நிற்க ஹூவிட் 12- 10 என்று 2-வது செட்டைக் கைப்பற்றினார்.
3-வது செட்டிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடியதால் ஆட்டம் டை பிரேக் சென்றது. அப்போதுதான் ஹூவிட்டின் சர்வ் அவர் காலை வாரி விட்டது. இரண்டு முறை டபுள் ஃபால்ட்களை அவர் செய்தார். அதன் பிறகு எளிதில் அடித்திருக்கவேண்டிய ஒரு ஃபோர் ஹேண்ட் ஷாட்டை சரியாக அடிக்காமல் கோட்டை விட ரோடிக் 7- 1 என்று 3-வது செட்டைக் கைப்பற்றினார்.
4-வது செட்டில் இரு தரப்பிலும் மாறி மாறி வாய்ப்புகள் சென்றபடி இருந்த போதும் ஹூபிட் லேசாக கால் காயம் ஏற்பட்டது போல் தெரிந்தார். ஆனாலும் ஹூவிட் 6-4 என்று வெற்றி பெற்றார்.
கடைசி செட்டில் 4- 4 என்று இருந்த போது ரோடிக்கிற்கு பிரேக் வாய்ப்பு கிடைத்தது. அதனை வென்றார் ரோடிக், ஹூவிட்டிற்கு தவிர்க்க 3 வாய்ப்புகள் கிடைத்தது அத்தனை வாய்ப்புகளையும் கோட்டை விட்டார். ஒரு வேளஎஇ ஹூவிட் இதில் பிழைத்திருந்தால் ரோடிக் வீட்டுக்கு செல்ல நேரிட்டிருக்கலாம். |