முதன்மை பக்கம் > விளையாட்டு > விளையாட்டு > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஒலிம்பிக்: இந்தியா சார்பில் ஹர்வந்த் கெளர் பங்கேற்பார்  Search similar articles
webdunia photoFILE
இந்தியாவின் சார்பில் பீஜிங் ஒலிம்பிக் வட்டு எறியும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்வந்த் கெளர் பங்கேற்பார் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஹர்வந்த் கெளரின் பயிற்சியாளர் பர்வீர் சிங் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாய்நாட்டின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே தடகள வீரர்களின் கனவு, இதற்கு ஹர்வந்த் கெளர் விதிவிலக்கல்ல எனத் தெரிவித்தார்.

தடகள வீரர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் முறையாக வழங்கப்படாததால் ஹர்வந்த் கெளர் ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.

இதையடுத்து, பீஜிங் நகரில் ஆகஸ்ட் 8ஆம் தேதி துவங்கும் ஒலிம்பிக் போட்டியில் கெளர் இந்தியாவின் சார்பில் பங்கேற்பாரா என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில், ஹர்வந்த் கெளர் இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என அவரது பயிற்சியாளர் நேற்று திட்டவட்டமாக தெரிவித்ததால் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது 28 வயதாகும் ஹர்வந்த் கெளர் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர். போதிய பணவசதி இல்லாததால் தேசிய போட்டிகளில் பங்கேற்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டில் ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஹர்வந்த் கெளருக்கு 2003இல் பஞ்சாப் காவல்துறையில் துணை எஸ்.ஐ பதவி வழங்கப்பட்டது.

காவல்துறையில் பதவியேற்ற சிறிது காலத்தில் காவல்துறை ஆய்வாளராக பதவி உயர்வு அளிப்பதாக கூறிய உத்தரவை நம்பி எல்.ஐ.சி. பணியில் இருந்து அவர் விலகியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பஞ்சாப் காவல்துறையில் அவர் பதவி இறக்கம் செய்யப்பட்டு தற்போது கான்ஸ்டபிள் அந்தஸ்தில் பணியாற்றி வருகிறார்.

இதன் காரணமாக ஹர்வந்த் கவுர் மிகவும் மனமுடைந்து போனதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக இந்திய தடகள கூட்டமைப்பு இயக்குனர் டோக்ராவை தொடர்பு கொண்ட போது, ஹர்வந்த் கவுருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைய தடகள கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்றும், பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு அவருடையை பதவியுயர்வு குறித்தும் வலியுறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும்
மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இவானோவிச் முதலிடம்!
தரவரிசையில் ஃபெடரர் முதலிடம்!
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்- டேவன்போர்ட் விலகல்!
ஜுனியர் ஹாக்கி:அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!
தரவரிசையில் பிரகாஷ் 101 இடங்கள் முன்னேற்றம்!
இறுதியில் அமிர்தராஜ் தோல்வி!