சென்னையில் நடந்து ஸ்குவாஷ் போட்டியின் இறுதிசுற்றுக்கு இந்திய வீராங்கனை தீபிகா சென்றார். அதே நேரத்தில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனை ஜோஷ்னா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சென்னை எழும்பூர் ஐ.சி.எல். அகாடமியில் நடந்து வரும் 6-வது ஐ.சி.எல். சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று பெண்கள் பிரிவில் நடந்த முதலாவது அரைஇறுதியில் 5-ம் நிலை வீராங்கனை தீபிகா பல்லிக்காலும் (இந்தியா) ஆலந்தின் ஆர்லா நுமும் மோதினார்கள். முதல் 2 செட்டை தலா ஒருவர் வீதம் வென்ற நிலையில், அடுத்த செட்களில் தீபிகா தனது வேகத்தை அதிகப்படுத்தினார்.
தனது அதிரடியாக ஷாட்கள் மூலம் 3-ம் நிலை இடக்கை வீராங்கனையின் நுமின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார். 49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 10-8, 7-9, 9-5, 9-1 என்ற செட் கணக்கில் தீபிகா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
2-வது அரைஇறுதியில் தேசிய சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஹாங்காங்கின் ஆனி அவுக்கு எதிரான மோதலில் முதல் செட்டை இழந்த உடனே பதட்டத்தில் காணப்பட்ட ஜோஷ்னா, போராடி வீழ்ந்தார். 69 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 10-9, 9-1, 5-9, 10-9 என்ற செட் கணக்கில் ஆனி அவு வெற்றி பெற்றார்.
இன்று மாலை நடக்கும் இறுதிப்போட்டியில் தமிழகத்தின் தீபிகா-ஆனி மோதுகின்றனர்.
ஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதியில் முதல் நிலை வீரர் இந்தியாவின் சவுரவ் கோஷல் 10-12, 5-11, 11-5, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் ஆஸ்ட்ரேலியாவின் ரையான் குஸ்கெலியை வீழ்த்தினார்.
மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் ரித்விக் பட்டாச்சாரியா 10-12, 7-11, 12-10, 11-7, 11-8 என்று நீண்ட போராட்டம் நடத்தி எகிப்தின் அன்வரி ரெடாவை தோற்கடித்தார். சவுரவ்-ரித்விக் இறுதிப்போட்டியில் சந்திக்கின்றனர்.
|