சிட்னியில் நடைபெறும் டெல்ஸ்ட்ரா கிரான்ட் ஃபிரீ நீச்சல் போட்டிகளில் 200 மீ. பட்டர்ஃபிளை நீச்சல் பிரிவில் இந்திய வீரர் ரேஹன் போன்ச்சா ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
4 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரேஹன் போன்ச்சா, இன்று 200 மீ பட்டர்ஃபிளை நீச்சலில் 2 நிமிடம் 01.40 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 5-வது இடம் வந்தார்.
ஒலிம்பிக் தகுதி "பி" இலக்கான 2: 1.79 என்ற நேரத்திற்குள் அவர் இலக்கை எட்டியுள்ளதால் பீஜிங் ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பை பெற்றுள்ளார். எனினும் இது உறுதியாவதற்கு அவர் ஜூலை 15ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
வரும் ஜூலை 8ஆம் தேதி மெக்சிகோவில் நடைபெறும் ஃபினா உலக நீச்சல் போட்டித் தொடரில் இவரது இந்த சாதனையை வேறொரு இந்திய வீரர் முறியடிக்காமல் இருந்தால் ஒலிம்பிக் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஹன் போன்ச்சா தகுதி பெற்றுவிட்டால், ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளுக்கு தகுதி பெறும் 4வது இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 200 மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் பிரிவில் விர்தவால் காதே, 100 மீ. பட்டர்ஃபிளை பிரிவில் ஆன்கூர் பொஸேரியா, 100 மீ, 200 மீ பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் சந்தீப் சேஜ்வால் ஆகிய இந்திய வீரர்கள் பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
|