வாட்ஃபோர்டில் நடைபெற்ற பி.எம்.சி. கோல்ட் ரேஸ் தடகள போட்டிகளில் இந்திய வீரர்கள் 3 பிரிவுகளில் தங்கம் வென்றாலும், ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கு அந்த வெற்றிகள் போதுமானதாக இல்லை.
ஆசிய கிராண்ட் பிரீ தடகள போட்டிகளில் பங்கேற்ற மகளிர் ரிலே பிரிவு ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான நேரத்தில் இலக்கை எட்டியும், அந்த போட்டித் தொடர் தகுதிச் சுற்று போட்டிகளாக அங்கீகரிக்கப்படாது என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு புதன் கிழமை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.
தற்போது பி.எம்.சி. தடகள போட்டிகளில், ஆடவர் 1500 மீ. ஓட்டப் பிரிவில் இந்திய வீரர் சதோலி ஹம்ஸா 3 நிமிடங்கள் 40.90 நொடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாலும் ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கு 3 நிமிடங்கள் 39 நொடிகளில் இலக்கை எட்ட வேண்டிய தேவை உள்ளதால், ஒலிம்பிக் தகுதி நழுவியுள்ளது.
ஆடவர் 800மீ. ஓட்டப்பிரிவில் சாஜீஷ் ஜோசப் 1 நிமிடம் 48.25 நொடிகளில் இலக்கை எட்டி சாதனை புரிந்தாலும் ஒலிம்பிக் தகுதி இலக்கான 1 நிமிடம் 47 நொடிகள் என்பதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் ஒலிம்பிக் தகுதி நழுவியுள்ளது.
மகளிர் 800மீ. ஓட்டப்பந்தயத்தில் 2 நிமிடம் 3.87 வினாடிகள் இலக்கை எட்டி தங்கம் வென்ற சினிமோல் பௌலோஸ் ஒலிம்பிக் தகுதி பெறும் நேர இலக்கிலிருந்து 2 நொடிகள் அதிகம் எடுத்துக் கொண்டுள்ளார்.
எனவே இம்மூவரும் தங்கம் வென்றாலும் ஒலிம்பிக் தகுதி தொடர்ந்து கை நழுவிக்கொண்டிருக்கிறது.
தற்போது ஜூலை 8ம் தேதி ஸ்வீடனிலும், ஜூலை 12-ம் தேதி அயர்லாந்திலும் நடைபெறும் தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான இறுதி தேதி ஜூலை 23-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
|