ஒலிம்பிக் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய மகளிர் அணி தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது தவறு என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஆசிய கிராண்ட் பிரீ தடகளப் போட்டிகளின் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் மகளிர் அணி புதிய சாதனை படைத்து தங்கம் வென்றது. பந்தய தூரத்தை இந்திய மகளிர் அணி 3 நிமிடம் 28.29 நொடிகளில் கடந்து வெற்றி பெற்றது. இது ஒலிம்பிக் போட்டிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட சிறந்ததாகும். எனவே பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மகளிர் அணி தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச தடகள கூட்டமைப்பு வெளியிட்டுள்ள முன்னனி தொடர் ஓட்ட வெற்றிகளில் இந்திய மகளிர் அணி பெற்ற வெற்றி இடம்பெறவில்லை. ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான முதல் 20 அணிகள் பட்டியலில் இந்திய ரிலே அணி இல்லை. இதற்கு காரணம், இந்திய மகளிர் அணி சாதனை படைத்து வெற்றி பெற்ற ஆசிய கிராண்ட் பிரீ தடகளப் போட்டி ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற அங்கீகாரம் அளிக்கப்பட்ட போட்டி அல்ல என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தி இந்திய தடகளச் சங்கத்திற்கும், வீராங்கனைகளுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆசிய தடகள கூட்டமைப்பு, இந்திய தடகள சங்கம், உட்பட பாதிக்கப்பட்ட சீன தடகளக் கூட்டமைப்பு ஆகியவை இந்த விவகாரத்தை சர்வதேச தடகள கூட்டமைப்பிடம் தீவிரமாக எடுத்துச் செல்லவில்லையெனில், இந்திய ரிலே மகளிர் அணி பீஜிங் செல்வது கடினம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜூன் 17ஆம் தேதி பட்டியலில் இந்திய ரிலே அணி 17ஆம் இடத்தில் இருந்தது. அதன் பிறகு கோரட்டில் நடைபெற்ற ஆசிய கிராண்ட் ப்ரீ ரிலே போட்டியில் இந்திய மகளிர் அணி இலக்கை எட்டிய 3:28.29 என்ற நேரம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டிருக்குமேயானால் 14-வது இடத்திற்கு உயர்ந்திருக்க வேண்டும்.
இதனால் முதல் 16 அணிகளுக்குள் இந்திய மகளிர் அணி வந்து பீஜிங்கிற்கு தகுதி பெற்றிருக்கும். ஆனால் தற்போது இந்த போட்டி கணக்கெலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று ஐ.ஏ.ஏ.எஃப் அறிவித்துள்ளதால் சராசரி 3:33.59 என்ற நேரக் கணக்கில் 21-வது இடத்தில் உள்ளதாக தெரிகிறது.
தகுதி பெறுவதற்கான நடைமுறைகளை ஐ.ஏ.ஏ.எஃப். கடந்த ஆண்டே விரிவான முறையில் வெளியிட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு தகுதி சுற்றுப் போட்டிக்கள் என்னென்ன என்று இந்த ஆண்டின் துவக்க்த்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. ல்தேசிய அளவிலான் விளையாட்டுப் போட்டிகள், ஐ.ஏ.ஏ.எஃப். அனுமதியை ஏற்கனவே பெற்றுள்ள அனைத்து உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள், அந்தந்த நாட்டு பிரதேச போட்டிகள் என்று ஐ.ஏ.ஏ.எஃப். தகுதிச் சுற்றுப் போட்டிகளை வகைப்பிரித்து வைத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கிராண்ட் ப்ரீ தடகளப் போட்டிகள் பிரதேச கூட்டமைப்புகள் நடத்தும் பிரதேச மற்றும் உட்பிரதேச போட்டிகள் பட்டியலில் இல்லை என்று ஐ.ஏ.ஏ.எஃப். கூறியுள்ளது.
|