விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு சீன வீராங்கனை ஸெங் ஜீ தகுதி பெற்றார். இவர் செக் குடியரசு வீராங்கனை வைடிசோவாவை 6- 2, 5- 7, 6- 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் அரையிறுதி வரை முன்னேறிய முதல் சீன வீராங்கனை என்ற சாதனையுடன், ஒயில்ட் கார்ட் அடிப்படையில் நுழைந்து அரையிறுதி வரை முன்னேறிய ஒரே வீராங்கனை என்ற சாதனையையும் ஸெங் ஜீ ஒருங்கே நிகழ்த்தியுள்ளார்.
வைடிசோவா இந்த ஆண்டில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்பதோடு தாக்குதல் ஆட்டத்திற்கு இவர் திணறி வந்தார். நேற்று சீன வீராங்கனை ஸெங் தாக்குதல் ஆட்டம் ஆடி வைடிசொவாவை கவிழ்த்தார். வைடிசோவாவின் முதல் சர்வை ஸெங் முறியடித்தார். அதன் பிறகு தன் சக்தி வாய்ந்த முன் கை வாகு அடியால் வைடிசோவாவை மேலெழ முடியாமல் செய்தார்.
இரண்டாவது செட்டில் ஸெங்கின் சர்வை வைடிசோவா 5-வது ஆட்டத்தில் முறியடித்தார். அதனால் அந்த செட்டை கைப்பற்றினார். வைடிசோவா மொத்தம் 39 தவறான ஆட்டங்களை ஆடினார். 6 முறை டபுள் ஃபால்ட் செய்தார்.
இதனால் 18ம் தரவரிசையில் உள்ள செக் குடியரசு வீராங்கனை வைடிசோவா காலிறுதிச் சுற்று வரை வந்து வெளியேறினார்.
|