இங்கிலாந்தில் நடைபெற்ற பி.எம்.சி. நைகி கிராண்ட் ப்ரீ தடகள போட்டிகளில் இந்திய வீரர்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தியும், ஒலிம்பிக் தகுதி இலக்கை தவற விட்டுள்ளனர்.
800மீ தடகள ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ராஜீவ் ரமேஸன் 1:47.06 என்ற நேரத்தில் இலக்கை கடந்து வெற்றி பெற்றார். ஆனால் ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான நேர அளவு 1:47 ஆகும். மயிரிழையில் அந்த வாய்ப்பை ரமேஷன் தவறவிட்டார்.
பயிற்சி மற்றும் ஒலிம்பிக் தகுதி ஆகியவற்றிற்காகவே நடத்தப்படும் இந்த தடகள தொடரில் மற்றொரு இந்திய வீரர் சாஜீஸ்க் ஜோஸப் 800மீ. தடகள பிரிவில் இலக்கை 1:47.48 என்ற நேரத்தில் கடந்தார். இவர் 3-வதாக வந்தார். இதுவும் சிறப்பான ஓட்டம் என்றாலும் ஒலிம்பிக் தகுதி பெற முடியாமல் போனது.
இங்கிலாந்தில் நடைபெறும் 3-வது தடகள தொடரில் ராஜீவ் ரமேஸன் மற்றும் சாஜீஷ் ஜோஸப் ஆகியோர் மூன்றாவது முறையாக ஒரு நிமிடம் 48 வினாடிகள் என்ற கால எல்லைக்குள் இலக்கை கடந்துள்ளனர்.
அதேபோல் 1500மீ தடகளப்பிரிவில் இந்திய வீராங்கனை சதோலி ஹம்ஸா, பிரீதம் பிந், ரவிந்தர் ஷர்மா ஆகியோர் நன்றாக ஓடியும் ஒலிம்பிக் தகுதி இலக்கான 3 நிமிடம் 39 வினாடிகள் என்ற நேரத்திற்குள் முடிக்காமல் தவறவிட்டனர்.
அதேபோல் 10,000 மீ. ஓட்டப்பந்தயத்தில் கடந்த தொடரின்போது தேசிய சாதனையை முறியடித்த இந்திய வீரர் சுரேந்திர சிங் இந்த தொடரில் 5000 மீ ஓட்டப்பந்தயத்தை வென்றாலும் ஒலிம்பிக் தகுதி இலக்கை எட்ட முடியவில்லை. இவர் 13 நிமிடம் 45 வினாடிகளில் இந்த தூரத்தைக் கடந்து 13 நிமிடம் 29 வினாடிகள் என்ற பஹதூர் பிரசாத்தின் தேசிய சாதனைக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
பஹதூர் பிரசாத்தும் ஒலிம்பிக் தகுதி நேர இலக்கான 13:28:00 என்பதை எட்ட முடியவில்லை.
ஆனால் இன்னமும் வாட்ஃபோர்ட், ஸ்டாக்ஹோம், அயர்லாந்து ஆகிய இடங்களில் நடைபெறும் தடகளப் போட்டிகள் மற்றும் ஜூலை 12ல் நடைபெறும் ஒலிம்பிக் தகுதி தடகள போட்டிகள் ஆகியவற்றில் இந்த வீரர்களுக்கு ஒலிம்பிக் தகுதி பெற வாய்ப்புகள் உள்ளது.
|