முதலாம் தரவரிசையில் உள்ள செர்பிய வீராங்கனை, விம்பிள்டன் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆனா இவானோவிச் தரவரிசையில் இல்லாத சீன வீராங்கனை ஜீ ஸெங்கிடம் 3-வது சுற்றில் தோல்வி தழுவி வெளியேறினார்.
72 நிமிடங்களே நடந்த இந்த ஆட்டத்தில் முதல் தரவரிசை வீராங்கனை இவானோவிச் 1- 6, 4- 6 என்று படு தோல்வியைச் சந்தித்தார். இதனால் ஸெங் ஜீ 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
களி மண் தரை டென்னிஸில் நிபுணரான இவானோவிச் புல்தரையில் சற்றே தடுமாறிவந்தார். நேற்று சீன வீராங்கனை ஸெங் ஜீ அவரது பலவீனங்களை நன்றாக பயன்படுத்தி அதிர்ச்சியளித்தார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் 6-ம் தரவரிசையில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 29-ம் தரவரிசையில் உள்ள அமேலி மவுரிஸ்மோவை 7- 6, 6- 1 என்ற செட்களில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
14-ம் தரவரிசையில் உள்ள போலந்தின் நட்சத்திர வீராங்கனை அக்னீஸ்கா ராத்வான்ஸ்கா ரஷ்யாவின் பாவ்லிசென்கொவாவை 6- 3, 6- 2 என்று வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு தகுதி பெற்றார்.
11-ம் தரவரிசை பிரான்ஸ் வீராங்கனை மரியோன் பர்டோலி அமெரிக்க வீராங்கனையும் சானியா மிர்சாவின் இரட்டையர் கூட்டாளியுமான பெதானி மேட்டக்கிடம் 4- 6, 1- 6 என்று தோல்வி தழுவி வெளியேறினார்.
ஹங்கேரிய வீராங்கனை ஆக்னெஸ் ஸாவெய், செக் குடியரசு வீராங்கனை வைடிசோவா ஆகியோரும் இறுதி- 16 சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
|