விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 6-வது தரவரிசையில் உள்ள அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக், விம்பிள்டன் தரவரிசையில் இல்லாத, உலகத் தரவரிசை 40வது இடத்தில் உள்ள செர்பிய வீரர் டிப்சரேவிச்சிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.
டிப்சரேவிச் 6- 7, 7- 5, 6- 4, 7- 6 என்ற செட்களில் ரோடிக்கை தோல்வி தழுவச்செய்தார். விம்பிள்டன் தொடரில் ரோடிக்கின் மிக மோசமான தோல்வியாகும் இது. 2-வது சுற்றிலேயே வெளியேறுவது இதுவே முதல் முறை.
8 முறை பிரேக் பாயிண்ட் வாய்ப்புகள் கிடைத்தும் ரோடிக் ஒன்றைக்கூட வெற்றியாக மாற்ற முடியவில்லை. சர்வ்களில் பலமானவர் ரோடிக். ஆனால் அவர் சர்வ்களை திறம்பட எடுத்து பந்தை ஆட்டத்திற்கு விடும்போது ரோடிக் பலமுறை தவறுகளை செய்பவர் என்பதற்கு நேற்றைய அவரது ஆட்டம் ஒரு உதாரணம்.
டிம் -ஹென்மேன் அவரை இது போன்று செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் பிரிட்டனின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமான ஆன்டி முர்ரே பெல்ஜியம் வீரர் மாலிஸ்ஸை 6- 4, 6- 2, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதிபெற்றார்.
ரஷ்ய வீரர்கள் டுர்சுனோவ், மைக்கேல் யூஸ்னி ஆகியோர் பிரிட்டனின் ஈடன் மற்றும் இத்தாலியின் கல்வானி ஆகியோரை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக் ஜெர்மனியின் ஷட்லரிடம் 3- 6, 7- 6, 6- 4, 4- 6, 4- 6 என்று போராடி தோல்வி தழுவினார். இதனால் ஷட்லர் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஜெர்மனி வீரர் நிகோலஸ் கெய்ஃபர் அர்ஜென்டீனாவின் ஆர்கெல்லோவை 6- 0, 6- 3, 6- 1 என்ற செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 14வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் பால் ஹென்றி மேத்யூ, தரவரிசையில் 16வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீரர் ஸ்டெபானெக், தரவரிசை 28-ல் உள்ள பிரான்ஸ் வீரர் சிமோன் ஆகியோரும் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
|