விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் முதல் சுற்றில் கொலம்பியா வீராங்கனை காட்டாலினா கேஸ்டனோவை வென்று இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.
விம்பிள்டன் 11வது ஆட்டக்களத்தில் சற்று முன் நடந்து முடிந்த போட்டியில் 7-6 (7-3), 3-6, 6-4 என்ற செட்கள் கணக்கில் கேஸ்டனோவை போராடி வென்றார் சானியா.
இப்போட்டிகளின் தர வரிசையில் 32 இடத்திலுள்ள சானியா மிர்சாவிற்கு முதல் செட்டிலேயே கடும் போட்டியைத் தந்தார் கேஸ்டனோ. 6-6 என்ற ஆட்டக்கணக்கில் டை பிரேக்கர் நடந்தபோது அபாரமாக சர்வ் செய்தும், கேஸ்டனோவின் சர்வை உடைத்தும் செட்டைக் கைப்பற்றினார் சானியா.
இரண்டாவது செட்டில் சானியாவின் இரண்டு சர்வ்களை உடைத்து செட்டை 6-3 என்ற கணக்கில் கேஸ்டனோ கைப்பற்றினார். ஆனால் இறுதி செட்டில் நன்கு நிதானித்து ஆடிய சானியா, கேஸ்டனோவின் சர்வை உடைத்து வாகை சூடினார்.
காயம் காரணமாக நீண்ட காலம் ஆடாதிருந்த சானியாவிற்கு இது இரண்டாவது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
|