தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஆசிய கிராண்ட்ப்ரீ தொடர் முதல் சுற்றில் 4x400 ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய மகளிர் அணி 3:22.55 என்ற நேரத்தில் ஓடி வெற்றி பெற்றனர்.
இந்திய அணியில் சத்தி கீதா, மந்தீப் கௌர், எம்.ஆர்.பூவம்மா, சித்ரா சோமன் ஆகிய வீராங்கனைகள் பங்குபெற்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கென்றே நடத்தப்படும் தொடர் இது. இந்த தொடரில் முதல் 16 இடங்களில் இடம்பெற்றால் மட்டுமே பீஜிங் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியும். அதனால் 4x400 ரிலே முதல் சுற்று ஓட்டப்பந்தயத்தை வெற்றி பெற்றது என்பது கூட ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கு போதுமானதாகாது.
அடுத்த இரண்டு சுற்றுக்களில் இதைவிட குறைந்த நேரத்தில் தூரத்தை கடக்கவேண்டும். குறைந்தது ஒரு சுற்றிலாவது குறைந்த நேரத்தில் தூரத்தை கடக்கவேண்டும்.
கடந்த ஞாயிறன்று ஐரோப்பியக் கோப்பை தடகளச் சுற்றில் ஜெர்மனி 6-வது இடத்திற்கு வந்து ஒலிம்பிக் தரப்பட்டியலில் 16 இடங்களுக்குள் வந்தது. அது 4x400 ரிலே ஓட்டப்பந்தயத்தில் 3:27.31 என்ற நேரத்தில் இலக்கை எட்டி ஒலிம்பிக் தகுதி பெற்றது. இதனால் சீனா 17-வது இடத்திற்கும், இந்தியா 19-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது.
இந்த ஆசிய கிராண்ட்ப்ரீ தொடர் தடகளப் போட்டிகளில் இந்தியா 7 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் இரண்டு முறையான தாண்டுதலையே மேற்கொள்ள முடிந்தது. நடுவே 4 முறை ஃபவுல் செய்தார்.
|