யூரோ 2008 கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் இத்தாலி, ஸ்பெயின் அணியிடம் 2-4 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியை தழுவியது. முன்னதாக ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.
பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் கோல் கீப்பர் இத்தாலி ஸ்ட்ரைக்கர்கள் டேனியல் டெ ரோஸ்ஸி, ஆன்டொனியோ நடாலே ஆகியோரது ஷாட்களை சரியாக கணித்து தடுத்து நிறுத்தினார். பிறகு ஸ்பெயின் வீரர் ஃபேபர்காஸ் வெற்றிக்கான பெனால்டி கோலை அடித்தார்.
1986 உலகக் கோப்பை, 1996 யூரோ கால்பந்து தொடர், பிறகு 2002 உலகக் கோப்பை போட்டிகளில் நாக் அவுட் மட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வி தழுவி வெளியேறியது ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டம் துவங்கி இடைவேளை வரை இரு அணிகளும் மந்தமாகவே ஆடின. பாஸ்கள், கோலுக்கான முயற்சிகள் சற்று மந்தமாகவே காணப்பட்டது. ஆனால் ஒரு முறை டேவிட் வில்லா அடித்த சக்தி வாய்ந்த கோல் ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் பஃபான் தடுத்து விட்டார்.
ஆனால் ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் கேமரோனேசி கோலுக்கு அருகேயிருந்து அடித்த ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் கேஸிலாஸ் சிறு குழப்பத்திற்கு பிறகு கால்களால் தடுத்தார்.
அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது. ஆனால் அதிலும் கோல்கள் எதுவும் விழவில்லை. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நிலைக்கு சென்றது. இதில் ஸ்பெயின் கோல் கீப்பர் கேஸிலாஸ் இரண்டு ஷாட்களை தடுத்ததால் ஸ்பெயின் அரையிறுதிக்கு சென்றது.
அரையிறுதிப் போட்டிகளில் ஜெர்மனி- துருக்கு அணிகளும், ரஷ்யா-ஸ்பெயின் அணிகளும் மோதுகின்றன.
|