பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் பிரேசில்-அர்ஜென்டீனா அணிகள் கோல் எதுவும் போடாமல் டிரா செய்தது.
இரு அணிகளும் தடுப்பு வியூகத்தை ஊடுருவி முன்னேற முடியாமல் தத்தளித்தன. அர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி ஆட்டம் முடியும் தருணத்தில் கோல் அடிக்க கிடைத்த 2 வாய்ப்புகளையும் தவற விட்டார்.
இந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் அர்ஜென்டீனாவும், பிரேசிலும் மோசமாக விளையாடி வருகின்றன. பராகுவே அணியுடன் பிரேசில் 2- 0 என்று அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.
அதே போல் அர்ஜென்டீனா அணி பலம் குறைந்த ஈக்வடார் அணியுடன் 1- 1 என்று சமன் செய்தது.
ஆனால் பிரேசில் அணியின் ஆட்டம் மோசமாகி வருவதாக அந்த அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் துங்காவை நீக்க வேண்டும் என்று பிரேசில் ரசிகர்கள் விரும்புவதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரிவு மற்றொரு ஆட்டத்தில் பராகுவே அணியை பொலிவியா அணி 4- 2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி வெற்றிபெற்றது. இந்தப் பிரிவில் இன்னமும் தோல்வியைச் சந்திக்காத அணி கொலம்பியா மட்டுமே.
இந்தப் பிரிவில் பராகுவே 13 புள்ளிகளுடன் முதலிடமும், 11 புள்ளிகளுடன் அர்ஜென்டீனா 2-வது இடமும், 10 புள்ளிகளுடன் கொலம்பியா 3-வது இடத்திலும், 9 புள்ளிகளுடன் பிரேசில் 4-வது இடத்திலும் உள்ளன.
வெனிசூலா அணிக்கும் சிலி அணிக்கும் கடைசி தகுதிச் சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி முதல் 4 இடங்களுக்கு முன்னேறும். அவ்வாறு முன்னேறினால் பிரேசிலுக்கு நெருக்கடி ஏற்படும், அதாவது செப்டம்பர் மாதம் நடைபெறும் அடுத்த சுற்று உலகக் கோப்பை தகுதிப் போட்டிகளில் பிரேசில் கடுமையாக பாடுபட வேண்டி வரும்.
|