குவீன்ஸ் கிளப்பில் நடைபெற்ற அர்டோய்ஸ் டென்னிஸ் தொடர் இறுதியில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல் செர்பிய வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஜெர்மனியில் நடைபெற்ற கெர்ரி வெபர் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் வென்றார்.
களிமண் தரை களத்தில் நிபுணரான ரஃபேல் நாடல் ஜோகோவித்சிற்கு எதிரான இறுதி ஆட்டத்தின் முதல் செட்டில் 0- 3 என்று பின் தங்கியிருந்தார். அதன் பிறகு அடுத்த சர்விலும் தோல்வியின் விளிம்பில் இருந்து 0- 4 என்று பின் தங்கியிருக்க வேண்டியது... ஆனால் அங்கிருந்து செட்டை டை பிரேக்கருக்கு நகர்த்தினார் நாடல். பிறகு டை பிரேக்கரிலும் வென்று முதல் செட்டை 7- 6 என்று கைப்பற்றினார். முதல் செட்டை தோற்ற வெறுப்பில் ஜோகோவிச் டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்தில் வீசி எறிந்தார்.
2-வது செட்டில் நாடல் ஜோகோவிச்சின் சர்வை துவக்கத்திலேயே முறியடித்தார். 2- 0 என்று முன்னிலை பெற்றிருந்தார். ஆனால் ஜோகோவிச் மீண்டும் நாடலை முறியடித்து பிறகு தனது சர்வ்களை வென்றதால் இருவரும் 4- 4 என்று சம நிலை எய்தினர். அதன் பிறகு செட்டை கைப்பற்ற வேண்டிய நிலையிலிருந்து ஜோகோவிச் இரண்டாவது செட்டை 7- 5 என்று தோல்வி அடைந்தார். நாடல் தற்போது தொடர்ச்சியாக 17 போட்டிகளை வென்றுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற கெர்ரி வெபர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் பிலிப் கோல்ஷ்ரெய்பரை சுவிஸ் வீரர் ஃபெடரர் 6- 3, 6- 4 என்று வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
|