யூரோ 2008 கால்பந்து தொடரில் இத்தாலியை பதம் பார்த்த ஹாலந்து நேற்று பிரான்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இத்தாலி அணியுடன் விளையாடும் போது ஹாலந்து எப்படி எதிர் தாக்குதல் நடத்தி அதிர்ச்சி அளித்ததோ அதே முறையில் பிரான்ஸ் அணியை எழும்ப விடாமல் மூழ்கடித்தது.
ஹாலந்தின் டிர்க் கியூட் முதல் கோலை அடிக்க ராபின் வான் பெர்ஸி, அர்ஜென் ரூபென், வெஸ்லி ஸ்னெய்ஜ்ட்தர் ஆகியோர் அடுத்த 3 கோல்களை அடித்தனர்.
ஹாலந்து முன்னாள் நட்சத்திரம் மார்கோ வான் பாஸ்டென் பயிற்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு ஹாலந்து கால்பந்து அணியில் புதிய ஆக்ரோஷமும், புத்துணர்வும், உத்வேகமும் பிறந்துள்ளது.
வரும் செவ்வாயன்று இந்தப் பிரிவில் கடைசி 2 இடங்களில் உள்ள பிரான்சும், இத்தாலியும் மோதுகின்றன. இதே தினத்தில் 2ம் இடத்தில் உள்ள ருமேனியாவும் ஹாலந்தும் மோதுகின்றன. இதில் ஹாலந்து தோல்வி தழுவினால் இத்தாலி, பிரான்ஸ் அணிகள் வெளியேறிவிடும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.
முதல் கோலை வெகு சுலபமாக பிரான்ஸ் அணியினர் விட்டுக் கொடுத்தனர். வான் டெர் வார்ட் அடித்த சாதாரண கார்னர் ஷாட்டை ஹாலந்தின் கியூட் என்ற வீரர் கோலுக்குள் நுழைத்தார்.
அதன் பிறகு பிரான்சின் நட்சத்திர வீரர் தியரி ஹென்றி அபாரமான சில தனி நபர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. கடைசியில் 70-வது நிமிடத்திலேயே தியரி ஹென்றி கோல் அடித்தார்.
ஹாலந்து அணியில் ரூத் வான் நிசல்ரூயின் சில அபாரமான திறமைகளால்தான் நேற்று ஹாலந்து அணிக்கு கோல்கள் குவிந்தன என்றால் அது மிகையாகாது.
தற்போது இந்த பிரிவில் -ஹாலந்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ருமேனியா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. பிரான்சும் இத்தாலியும் தலா 1 புள்ளிகள் பெற்றுள்ளன.
|