யூரோ 2008 கால்பந்து போட்டியில் ரஷ்யாவை ஸ்பெயின் அணி 4- 1 என்ற கோல் கணக்கிலும், கடந்த யூரோ சாம்பியனான கிரீஸ் அணியை ஸ்வீடன் 2- 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றன
பிரிவு 'டி' முதல் ஆட்டத்தில் நேற்று பலமான ஸ்பெயின் அணியும், ரஷ்யாவும் மோதின. ஸ்பெயின் நட்சத்திர வீரராக கருதப்படும் டேவிட் வில்லா இடைவேளைக்கு முன் 2 கோல்களையும் பிறகு ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்தபோது 3-வது கோலையும் அடித்து ஹேட்ரிக் அடித்தார். இதனால் இவர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரஷ்ய அணிக்கு ஆட்டம் முடியும் தறுவாயில் ரோமன் பாவ்லுசென்கோ ஆறுதல் கோலை அடித்தார். ஆனால் அதன் பிறகும் ஸ்பெயினை சேர்ந்த ஃபேபர்காஸ் 4வது கோலை அடித்தார்.
இந்த வெற்றி மூலம் ஸ்பெயின் அணி தொடர்ந்து 17 போட்டிகளை வென்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு யூரோ கோப்பை கால்பந்து போட்டியிலும் ஸ்பெயின் ரஷ்யாவை தன் முதல் போட்டியில் வீழ்த்தியது. ஆனால் இரு அணிகளும் காலிறுதிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு 'டி' பிரிவு ஆட்டத்தில் ஸ்வீடன் 2- 0 என்று கிரீஸ் அணியை வீழ்த்தி தன் முதல் வெற்றியை ஈட்டியது. ஸ்வீடனின் நட்சத்திர வீரர் ஸ்லடான் இப்ராஹிமோவிச் வெற்றிக்கான கோலை அடித்தார். இவர் 2005 ஆம் ஆண்டிற்கு பிறகு தன் முதல் கோலை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரீஸின் முன்னணி வீரர் கேரிஸ்டியாஸ் ஆட்டத்தின் துவக்கத்திலேயே முறை தவறிய ஆட்டத்திற்காக மஞ்சள் அட்டை காண்பிக்கபட்டார். ஆனாலும் கிரீஸ் அணிக்கு கோல்கள் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்புகள் தவற விடப்பட்டன.
|