யூரோ 2008 கால்பந்து போட்டிகளின் முதல் நாள் ஆட்டத்தில் போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தை செக் குடியரசும், துருக்கியை போர்ச்சுகலும் வென்றன!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளையடுத்து கால்பந்து ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் யூரோ எனப்படும் ஐரோப்பிய நாடுகள் கால்பந்து போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நேற்று துவங்கின. 13வது யூரோ கால்பந்து போட்டிகளை ஆஸ்ட்ரியாவும், சுவிட்சர்லாந்தும் இணைந்து நடத்துகின்றன.
நேற்று நடந்த முதல் நாள் ஆட்டத்தில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்தும், செக் குடியரசும் மோதின. ஆட்டம் துவங்கியது முதலே விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதி முடிய சற்று நேரத்திற்கு முன் செக் குடியரசின் தலைவர் அலெக்ஸ் ஃப்ரே முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு வெளியேறினார். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் போடவில்லை.
இரண்டாவது பாதியில் 70வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய வேக்லா ஸ்வெர்கோஸ் சுவிட்சர்லாந்தின் தடுப்பு அரணை மீறி கோலடித்தார். அதன்பிறகு மேலும் விறுவிறுப்பான ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் பலர் அடித்த ஷாட்கள் கோல் கம்பத்திலேயே பட்டுத் திரும்பின.
இறுதியில் சுவிட்சர்லாந்து அணி கோல் எதுவும் போட முடியாமல் முதல் போட்டியில் 0-1 என்ற கணக்கில் செக் குடியரசிடம் தோல்வியைத் தழுவியது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல், துருக்கி அணிகளுக்கு இடையே நடந்த மற்றொரு போட்டியில் போர்ச்சுகல் அணி 2 கோல்கள் அடித்து துருக்கி அணியை வென்றது.
போட்டியின் 2வது பாதியிலேயே இந்த இரண்டு கோல்களையும் அடித்தது போர்ச்சுகல் அணி. இந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிறப்பாக விளையாடினார்.
|