2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்களை கண்டுபிடிப்பதற்கான புதிய மருத்துவ சோதனையை உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் நிராகரித்துவிட்டது.
இதனை ஜெர்மனியின் கொலோக்னி விளையாட்டு கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் மரியோ டேவிஸ் தெரிவித்துள்ளார்.
கொலோக்னி விளையாட்டு கல்லூரியில் ஊக்க மருந்து ஆராய்ச்சி பிரிவில் பேராசிரியராக இருக்கும் டேவிஸ், விளையாட்டு வீரர்கள் இன்சுலின், சினாக்தென் போன்ற ஊக்க மருந்துகள் உட்கொள்வதை கண்டுபிடிக்க உதவும் மருத்துவ சோதனை முறையை கண்டுபிடித்தார்.
ஆனால் உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் அந்த சோதனையை பீஜிங் ஓலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்த மறுப்பு தெரிவித்தது. இது குறித்து ஜெர்மன் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் டேவிஸ் கூறுகையில்:
"அமெரிக்க தடகள வீராங்கனை மரியன் ஜோன்ஸ், ஊக்க மருந்து சோதனையில் இன்சுலின் மருந்தை எளிதாக கண்டுபிடிக்க முடியாது என்ற காரணத்தினால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும்போது உபயோகித்து வந்தார்.
ஆனால் இந்த புதிய மருத்துவ சோதனையை மூலம் இன்சுலின் மருந்தை உபயோகிப்பதை கண்டுபிடிக்கலாம். உலக ஊக்க மருந்து கழகம் ஜெர்மனியில் இரண்டு விளையாட்டு கல்லூரிகளுக்கு இந்த ஆய்விற்கான அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவற்றில் கொலோக்னி விளையாட்டு கல்லூரியும் ஒன்று. ஊக்க மருந்து பயன்பாட்டை கண்டுபிடிக்கும் புதிய சோதனைக்கு, உலக ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் பொருளாதார உதவி அளித்தது. ஆனால் இப்போது இந்த முறையை பயன்படுத்த ஊக்க மருந்து தடுப்புக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த சோதனையை நடைமுறைப்படுத்தினால் ஓலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில், ஊக்க மருந்தை பயன்படுத்த வீரர்கள் தயங்குவார்கள்" என்று டேவிஸ் கூறினார்.
|