பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற உள்ள 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் தடகள வீரர் யார் என்பதைக் கணிப்பது அவ்வளவு சுலபமில்லை என்றே தோன்றுகிறது.
வரும் ஆகஸ்ட் 16ம் தேதி, 11.30 மணியளவில் துவங்கி பத்து நிமிடங்களில் முடிந்து விடும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உலகின் மிக வேகமான தடகள வீரரை உலகிற்கு அறிமுகப்படுத்தலாம்.
இந்தத் தகுதிக்கு உரிய வீரர்களாக ஜமைக்காவின் உசைன் போல்ட் மற்றும் அசாஃபா பாவல், அமெரிக்காவின் டைசன் கே ஆகியோர் திகழ்கின்றனர்.
இந்த மும்மூர்த்திகளைப் பற்றிய ஒரு சிறிய முன்-ஓட்டம்...
உசைன் போல்ட்: கடந்த மே 31ஆம் தேதி நியூயார்க் நகரில் நடந்த ரீபாக் கிராண்ட் ப்ரிக்ஸ் (Reebok Grand Prix) போட்டித் தொடரில், 100 மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட இவர், பந்தய தூரத்தை 9.72 விநாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதன் மூலம், பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெறும் 100 மீட்டர் போட்டியிலும் உசைன் போல்ட் புதிய உலக சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
கடந்த 1986 ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜமைக்காவின் ட்ரிலாவ்னி பகுதியில் பிறந்த உசைன் போல்ட், 2002இல் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளத் தொடரில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார்.
சர்வதேச தடகள சம்மேளனத்தின் கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எஃப்)சார்பில் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்று அறிவிக்கப்பட்டுள்ள உசைன், ஐ.ஏ.ஏ.எஃப்-இன் வளர்ந்து வரும் நட்சத்திர விருதை 2 முறை பெற்றுள்ளார்.
|