இதே போல் கடந்த 1933 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த பெண்களுக்கான செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை, மகாராஜா உமர் ஹயத்கானின் அரண்மனை சேவகி பாத்திமா வென்றுள்ளது, சுதந்திர இந்தியாவுக்கு முன்பு வாழ்ந்த இந்திய பெண்களின் செஸ் சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இதே பட்டத்தை 13 வயது 4 மாதங்களை நிறைவு செய்த கோனேரு ஹம்பி கடந்த 1990-91 ஆம் ஆண்டில் வென்று, மீண்டும் இந்திய பெண்களின் கொடியை சர்வதேச செஸ் கம்பத்தில் உயரப் பறக்கவிட்டார். (தற்போது செஸ் வீராங்கனைகளில் ஜூடிட் போல்கருக்கு அடுத்த (2வது) இடத்தில் ஹம்பி உள்ளார்.)
உலகின் சிறந்த பெண் செஸ் வீராங்கனையாக கருதப்படும் ஜூடிட் போல்கர், 12 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை பெற்றார். சமீபத்தில் காலமான அமெரிக்கா வீரர் பாபி பிஷ்ஷர் மற்றும் ரஷ்யாவின் கேரி காஸ்ப்ரோவை விட குறைவான வயதில் அவர் இப்பெருமையை பெற்றவர்.
மேற்கூறிப்பிட்ட பெண்களின் அளவுக்கு சிறப்பாக விளையாடும் தகுதி பெற்ற பெண்கள் பலர் உலகளவில் இருந்தாலும், உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இன்று வரை எந்த மங்கையும் வென்றதில்லை.
இதற்கு பெண்களுக்கு நீண்டகால பயிற்சி தேவைப்படும்... பெண்கள் இவ்விஷயத்தில் இன்னும் முனைப்பு காட்ட வேண்டும்... குடும்ப சூழ்நிலைகளும் ஒரு காரணம்... போட்டியாளரின் நகர்த்தல்களை கணிக்கும் திறமை பெண்களுக்கு இல்லை... என பல்வேறு தரப்பில் இருந்து கருத்துகள் வழக்கம் போல் கூறப்படுகிறது.
இதுகுறித்து 64 ஸ்கொயர் மெஜிசியன் (64 Square Magician) என்றழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை கூறுகையில், "சிறப்பான செஸ் வீரர்கள் பங்கேற்கும் செஸ் தொடர்களில் பெண்கள் பங்கேற்பதில்லை. எனவே அவர்களுக்கு போதிய பயிற்சியும், நம்பிக்கையும் கிடைப்பது இல்லை என தாம் கருதுவதாக" கூறியுள்ளார்.
மேலும், பெண்களுக்கு சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் தரக்கூடாது என யாரும் தடுப்பது கிடையாது. இத்துறையில், பெண்களுக்கு ஆர்வமும், முறையான பயிற்சியும் இருந்தால் நிச்சயம் ஒருநாள் இப்போட்டியில் "ராணிகளின் கொடியும் பறக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.
விமானம் முதல் விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் கொடிகட்டு பறக்கும் பெண்கள், சதுரங்கத்திலும் தங்கள் முத்திரையை பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நம்பலாம்.
|