அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இடம் வழங்க வேண்டும் என்ற மசோதாவுக்கு பெரும்பாலான இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் வெளிப்படையான ஆதரவை வழங்கியுள்ளதை சமீபத்திய செய்திகள் உணர்த்தி வருகின்றன்.
ஆனால், உலகளவில் பிரபலமடைந்துள்ள செஸ் விளையாட்டில், பெண்களின் நிலை இன்னும் உயர வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது... காரணம் சர்வதேச செஸ் சாம்பியன் பட்டத்தை இதுவரை எந்தப் பெண்ணும் வென்றதில்லை.
சர்வதேச அளவில் புகழ் பெற்று, நம்பர்-1 வீரராக விளங்கும் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சிறுவயதில் தனது அன்னை சுசீலா, சதுரங்கத்தின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்ததை பெருமையுடன் நினைவு கூறுவதை பல செய்திகள் வெளிப்படுத்தி உள்ளன.
பெண்களுக்கான சர்வதேச செஸ் போட்டிகள் தனியாக நடத்தப்பட்டாலும், ஹங்கேரி நாட்டின் பிரபல வீராங்கனை ஜூடிட் போல்கர் போன்றோர், இதில் விளையாடுவது இல்லை. மாறாக ஆண் - பெண் என இருபாலரும் பங்கேற்கும் சர்வதேச செஸ் சாம்பியன் போட்டியிடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எனினும் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெண்கள் யாரும் கைப்பற்றியதில்லை என்பது பெரும்பாலானோர் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை.
கடந்த 1896 ஆம் ஆண்டு முதல் செஸ் போட்டிகளில் பெண்கள் பங்கேற்று வருகின்றனர். அன்று முதல் இந்த கறுப்பு-வெள்ளை விளையாட்டில் பல 'ராணிகள்' மகுடம் சூடியிருந்தாலும், அது பெண்கள் மட்டும் பங்கேற்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளாகவே இதுவரை இருந்துள்ளது.
செஸ் விளையாட்டில் பிரபல பெண்கள்!
அன்னா குல்கோ என்ற பெண்மணி, அமெரிக்காவின் பெண்கள் செஸ் பட்டத்தை 9-0 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதேபோல் கடந்த 1859-1924 வரை வாழ்ந்த எடித் பெய்ர்ட், 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிக்கலான செஸ் விளையாட்டுகளுக்கு விடை கண்டறிந்த பெருமையை பெற்றவர்.
கடந்த 2001-2004ம் ஆண்டு வரை சர்வதேச பெண்கள் செஸ் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சீன வீராங்கனை ஸு-சென் (Zhu Chen), இதுவரை 2,483 ஈ.எல்.ஓ. புள்ளிகளை பெற்று சக வீரர்களை தொடர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.
ரஷ்யாவை சேர்ந்த மேய ஷிபர்டனிட்ஸ் (Maia Chiburdanidze), 13 வயதிலேயே சர்வதேச செஸ் மாஸ்டராக பட்டம் பெற்றார். 16 வயதில் ரஷ்யாவின் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 17 வயதில் சர்வதேச பெண்கள் சாம்பியன் பட்டத்தையும் வென்று உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்த சாதனைப் பெண்மணி.
|