சீனாவில் நடைபெற்ற 29-வது ஒலிம்பிக் போட்டிகள் நேற்றிரவு கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.
கடந்த 8-ஆம் தேதி சீனத் தலைநகர் பீஜிங்கில் 29-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. 16 நாட்கள் நடந்த இப்போட்டியில் 204 நாடுகளைச் சேர்ந்த 11,028 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மொத்தம் 28 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு 302 தங்கம், 303 வெள்ளி, 353 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஒலிம்பிக் திருவிழாவின் நிறைவு விழா நேற்று மாலை, பீஜிங் மைதானத்தில் நடந்தது. போட்டியில் பங்கேற்ற 204 நாடுகள் சார்பில் வீரர்கள் தங்கள் தேசியக் கொடியுடன் அணி வகுத்து வந்தனர். இந்தியா சார்பில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்குமார் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.
இதன் பிறகு, வரும் 2012- ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டனிடம் ஒலிம்பிக் கொடி ஒப்படைக்கப்பட்டது. பீஜிங் மேயர் ஜின்லாங், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் ஜேக்ஸ் ரோஜிடம் ஒப்படைக்க, அவரிடம் இருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் ஒலிம்பிக் கொடியை பெற்றுக் கொண்டார்.
தொடக்க விழாவைப் போலவே நிறைவு விழாவையும் சீனா பிரம்மாண்டமாக நடத்தியது. மையப் பகுதியில் கோபுரம் போன்று அமைக்கப்பட்டு அதில் சீன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியை நடத்தியது, அந்தரத்தில் டிரம்ஸ் இசை, அதிரவைத்த வண்ண வண்ண வாண வேடிக்கைகள் போன்றவை பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தின.
லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான கவுன் - டவுனை துவக்கி வைக்கும் வகையில் இரட்டை மாடிப் பேருந்தில் இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம் நின்றபடி ரசிகர்கள் நோக்கி கால்பந்தை உதைத்தார். இதன் பின்னர் பீஜிங் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதை பெருமிதத்துடன் குறிப்பிட்ட அதிபர் ஹூ ஜிண்டாவோ, இதற்கான அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
|