முதன்மை பக்கம் » விளையாட்டு » கிரிக்கெட் » செய்திகள் » கால்லே டெஸ்ட்: பாகிஸ்தானை வறுத்தெடுத்த தில்ஷான், சங்கக்காரா! (Dilshan, Sangakkara Centuries Puts Srilanka in a Strong Position)
கால்லேயில் நடைபெறும் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கையின் தில்ஷான், சங்கக்காரா சதம் எடுக்க ஜெயவர்தனே அரைசதம் அடிக்க முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்து பலமான நிலையில் உள்ளது இலங்கை.
டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. பரனவிதனா துவக்கத்தில் 4 பவுண்டரிகளுடன் அபாரமாக விளையாடினாலும் சயீத் அஜ்மல் வந்தவுடன் பேத்தத் தொடங்கி கடைசியில் வெறுப்பில் மேலேறி வந்து அடிக்க முயன்று ஸ்டம்ப்டு ஆனார்.
அதன் பிறகு தில்ஷானும், சங்கக்காராவும் இணைந்தனர். பாகிஸ்தான் ஸ்பின்னர்களான அப்துர் ரஹ்மான், சயீத் அஜ்மல், ஹபீஸ் ஆகியோரது சிக்கனமான டைட் பந்து வீச்சில் ரன் எடுப்பது சிரமமாக இருந்தாலும் தில்ஷான் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை அவ்வப்போது காண்பித்து அரை சதம் எடுத்தார். ஒரு முறை ஹபீஸை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்சர் ஒன்றையும் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்காக 63 ரன்களைச் சேர்த்த துவக்க வீரர்கள் போன பிறகு சங்காவும், தில்ஷனும் இணைந்து ஸ்கோரை 187 ரன்களுக்கு உயர்த்தினர்.
தில்ஷன் 175 பந்துகளில் 13 பவுண்டரி 1 சிக்சர் சகிதம் 101 ரன்கள் எடுத்தார். அப்துர் ரஹ்மான் பந்தை ஸ்வீப் செய்து பவுண்டரி அடித்த தில்ஷான் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 13வது சதத்தை எடுத்தார். தில்ஷான் 101 ரன்கள் எடுத்து சயீத் அஜ்மல் பந்தில் எல்.பி. ஆனார்.
அப்போது அரைசதம் எடுத்த சங்கக்காராவினால் இலங்கை அணி தேநீர் இடைவேளையின் போது 188/2 என்று இருந்தது.
பிறகு சங்கக்காரா 159 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். 29வது சதம் கண்டு சங்கக்காரா ஆட்ட முடிவில் 111 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
ஜெயவர்தனேயும் 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவரும் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் மட்டுமே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். பந்துகள் அவ்வப்போது எழும்பி, திரும்பின இலங்கை பேட்ஸ்மென்கள் சற்றே திணறினாலும் தங்களது அனுபவத்தின் வாயிலாக பாகிஸ்தான் அதில் பயனடையாமல் பார்த்துக் கொண்டனர்.