இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் தில்ஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
கான்பூரில் நடந்து வரும் இந்த டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சைத் தொடர்ந்தது. மதிய உணவு இடைவேளை வரை இலங்கைப் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து விளையாடிய இந்திய வீரர்கள், தேனீர் இடைவேளையின் போது சொதப்பினர்.
ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, 642 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. துவக்க வீரர்கள் சேவாக் 131 ரன்கள், கம்பீர் 167 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய திராவிட் 144 ரன்களில் இன்று ஆட்டமிழந்தார்.
முதல் பந்தில் தில்ஷான் அவுட்: தேனீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் இன்னிங்சைத் துவக்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே தில்ஷான் விக்கெட்டைப் பறிகொடுத்தது. ஜாகீர்கான் லெக் சைடில் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆசைப்பட்ட தில்ஷான், ‘லீடிங் எட்ச்’ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். புதுமுக வீரர் ஓஜா, தாம் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் ‘கேட்ச்’ பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவர் சங்கக்காரா, துவக்க வீரர் பரனவிதனா உடன் இணைந்து நிதானமாக விளையாடினார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. சங்கக்காரா, பரனவிதனா இருவரும் தலா 30 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.