கான்பூர் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்தியா 642 ரன்கள் குவிப்பு
கான்பூர், புதன், 25 நவம்பர் 2009( 17:10 IST )
இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 641 ரன்கள் குவித்துள்ளது.
இன்றைய 2ஆம் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக 4 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, அடுத்த 6 விக்கெட்டுகளை 29 ரன்களுக்குள் இழந்தது.
லஷ்மண் 63 ரன்களில் ஆட்டமிழந்த பின்னர், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் விரைவாக ரன் குவிக்க முயன்று ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் 67 ரன்கள், தோனி 4 ரன்கள், ஹர்பஜன் 5 ரன்கள், ஜாகீர்கான் ஒரு ரன், ஸ்ரீஷாந்த் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். புதுமுக வீரர் ஓஜா ஒரு ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் பந்தில் விக்கெட்: தேனீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் இன்னிங்சைத் துவக்கிய இலங்கை அணி முதல் பந்திலேயே தில்ஷான் விக்கெட்டைப் பறிகொடுத்தது. ஜாகீர்கான் லெக் சைடில் வீசிய முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட ஆசைப்பட்ட தில்ஷான், ‘லீடிங் எட்ச்’ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
புதுமுக வீரராகக் களமிறங்கிய ஓஜா, டெஸ்ட் போட்டிகளில் முதல் பந்திலேயே கேட்ச் (தில்ஷான் விக்கெட்) பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிங்சின் 4வது ஓவர் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. துவக்க வீரர் பரனவிதனா 4 ரன்கள், சங்கக்காரா 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.