ஜொனாதன் ட்ராட் நேர்மையை சந்தேகிக்கும் மைக்கேல் வான்
வெள்ளி, 30 அக்டோபர் 2009( 11:55 IST )
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்காக தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் எடுத்த இங்கிலாந்திற்கு விளையாடும் தென் ஆப்பிரிக்கா வீரர் ஜொனாதன் டிராட், அதற்கு முந்தைய தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில், தொடரை வென்ற தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்று அப்போதைய இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான் குற்றம்சாட்டியுள்ளார்.
"இங்கிலிஷ் கிரிக்கெட்டிற்கு அது ஒரு சோகமான நாள், அதாவது எனது தலமை பொறுப்பின் கடைசி நாள் என்ற சோகத்தை விடவும் பெரிது. அப்போது ஜொனாதன் டிராட் தென் ஆப்பிரிக்க வீரர்களுடன் அவர்கள் வெற்றியை கொண்டாடினார், அதற்கு ஒரு வாரம் முன்புதான் அவர் இங்கிலாந்து அணியில் 12-வது வீரராக சேர்க்கப்பட்டார். என்று மைக்கேல் வான் தன் கிரிக்கெட் நூலான 'டைம் டொ டிக்ளேர்' என்பதில் குறிப்பிட்டுள்ளார்.
"அவர் நான் கூறுவதை மறுக்கிறார், ஆனால் இங்கிலாந்தின் மற்ற சில வீரர்களும் இந்தக் காட்சியை என்னுடன் பார்த்தனர். இதனால் அவர் ஏதோ ஒன்றை தவறாக செய்கிறார் என்று நான் கூற வரவில்லை. அவர் கொஞ்சம் புத்தி சாதுரியமாக நடந்து கொண்டிருக்கவேண்டும். முதல் வாரத்தில்தான் அவர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படுகிறார், அடுத்த வாரத்தில் தான் பிறந்த நாட்டு வீரர்களுடன் வெற்றியை கொண்டாடுகிறார். இது புத்திசாலித் தனமான செயல் அல்ல. ஆஸ்ட்ரேலியாவிலோ, தென் ஆப்பிரிக்காவிலோ இது போன்று நடக்க முடியுமா?" என்று அவர் அந்த நூலில் எழுதியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக தொடரை இழந்த அன்றைய தினம் நான் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தேன், அப்போது டிராட் தென் ஆப்பிரிக்க வீரர்களை தட்டி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டிருந்தார். இங்கிலாந்து கிரிக்கெட் என்னவாக மாறியிருக்கிறது என்ற கேள்வியையும் வருத்தத்தையும் இது எனக்குள் ஏற்படுத்தியது.
ஆனால் மறு நாள் அவர் தென் ஆப்பிரிக்க வீரர்கள்தான் தனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்று டிராட், வானின் குற்றச்சாட்டை மறுத்த்ள்ளார்.
ஆனால் மைக்கேல் வானோ, தான் மட்டுமல்லாது இன்னும் 4, 5 இங்கிலாந்து வீரர்கள் நடந்ததை நேரில் பார்த்ததாகக் கூறி டிராட்டின் மறுப்பை ஏற்க மறுத்துள்ளார்.