கடைசி ஓவர்களை சிக்கனமாக வீச தற்போது மெக்ரா அணியில் இல்லாமல் போய்விட்டாரே என்று ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அங்கலாய்த்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கடைசி ஓவர்களில் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வதோதராவில் இந்திய அணி நீண்ட நேரம் முன்பே தோல்வி தழுவி விட்டது ஆனால் ஆஸ்ட்ரேலியாவின் மோசமான இறுதி ஓவர்களால் பிரவீண் குமாரும் ஹர்பஜன் சிங்கும் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றனர்.
நாக்பூரில் நேற்று கடைசி 10 ஓவர்களில் 108 ரன்கள் குவிக்கப்பட்டது. இது எப்படிப் பார்த்தாலும் மிக அதிகமானது என்கிறார் பாண்டிங்.
மெக்ரா ஓய்வு பெற்ற பிறகிலிருந்தே கடந்த 2 ஆண்டுகளாக கடைசி ஓவர்களை சிக்கனமாக வீச ஆட்கள் இல்லை என்று கூறுகிறார் பாண்டிங்.
"இந்திய பேட்ஸ்மென்கள் போல் அடித்து ஆடும் வீரர் ஒருவர் கிரீசில் இருக்கிறார் என்றால் அளவு சற்றே, சில சென்டிமீட்டர்களே தள்ளிப்போனாலும் நாம் தொலைந்தோம், அவர்களிடம் நேற்று விக்கெட்டுகள் நிறைய இருந்தது, இதனால் அவர்கள் மிகவும் சுதந்திரமாக விளையாடினர்" என்று கூறினார் பாண்டிங்.
டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய கூறியது அரிதானதுதான் என்று ஒப்புக் கொண்ட பாண்டிங். ஆஸ்ட்டேலிய அணியின் பலம் பேட்டிங்தான், இதனால் ரன்களை துரத்தலாம் என்று நினைத்தேன். அதில் தவறில்லை. ஆனால் 354 ரன்கள் என்பது மிகவும் அதிகம். ஆனால் இந்திய பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடினார்கள்.