நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 354 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்ட்ரேலியா 48.3 ஓவர்களில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட நாயகனாக இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தேர்வு செய்யப்பட்டார்.
கடினமான இலக்கை துரத்தக் களமிறங்கிய ஆஸ்ட்ரேலியா பிரவீண் குமார், இஷாந்த் ஷர்மா, நெஹ்ரா ஆகியோரது அபாரமான ஸ்விங் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதலிலேயே 3 விக்கெட்டுகளை பறி கொடுத்து 45 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
டிம் பெய்னிற்கு பிரவீண் குமார் வீசிய இன்ஸ்விங்கர் பற்றி பெய்னுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேராக ஸ்டம்புகளை தாக்க மைதானத்தை விட்டு ஸ்டம்ப் பறந்தது.
19 ரன்கள் எடுத்த ஷேன் வாட்சன் இஷாந்த் ஷர்மாவின் ஆஃப் ஸ்டம்பிற்கு வெலியே பிட்ச் ஆகி அளவுக்கு அதிகமாக எழும்பி வந்த பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சச்சினிடம் கேட்சாக அமைந்தது.
நேற்றைய பந்து வீச்சில் ஹர்பஜன் சிங் மட்டுமே படு மோசமாக வீசி 10 ஓவர்களில் காரணமில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் ஆஸ்ட்ரேலிய வீரர்களுக்கு 62 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
350 ரன்களுக்கு மேலாக அதிக முறை எடுத்த அணியாக இந்தியா திகழ்கிறது. 12 முறை இதுவரை 350 ரன்களுக்கு மேல் இந்தியா குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 8 முறையும், ஆஸ்ட்ரேலியா 6 முறையும் எடுத்துள்ளது.
354 ரன்கள் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். மேலும் முதலில் பேட் செய்து ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிராக எந்த அணியும் 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்ததில்லை.
தோனி எடுத்த 124 ரன்கள் எந்த அணியின் கேப்டனும் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக எடுத்த ஸ்கோரை காட்டிலும் அதிகமானது. சனத் ஜெயசூரியா இதற்கு முன் 122 ரன்களை சிட்னியில் எடுத்தார். இது ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக ஒரு விக்கெட் கீப்பர் எடுக்கும் அதிக பட்ச ரன்களாகும். கம்ரன் அக்மல் 116 ரன்களை அபுதாபியில் எடுத்தார். ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக சதம் எடுக்கும் 4-வது விக்கெட் கீப்பர் ஆவார் தோனி.
99 ரன்களில் வெற்றி என்பது ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியாகும். 4-வது மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியுள்ளது.
கடைசி 7 ஓவர்களில் இந்தியா 87 ரன்களை நேற்று குவித்தது.