கொழும்புவில் நடைபெற்ற நியூஸீலாந்து-இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நியூஸீலாந்து அணி எடுத்த 141 ரன்களை துரத்தக் களமிறங்கிய இலங்கை 138 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஜேகப் ஓரம் ஹேட்ரிக் சாதனை புரிந்தார்.
webdunia photo
FILE
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 60 ரன்களும், கப்தில் 29 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் தில்ஷன் 57 ரன்களில் (28 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறியதும் இலங்கை அணி தடுமாறியது. எடுத்த எடுப்பிலேயே ஷேன் பாண்டின் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார் தில்ஷான்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட போது, அந்த அணியின் கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன.
கடைசி ஓவரை வீசிய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேகப் ஓரம் முதல் 2 பந்துகளில் பண்டாரா, குலசேகரா ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்தார். தனது முந்தைய ஓவரின் கடைசி பந்தில் மேத்யூசை (21 ரன்) ஆட்டம் இழக்கச் செய்திருந்ததால் இது ஜேக்கப் ஓரமின் `ஹாட்ரிக்' விக்கெட் சாதனையாக அமைந்தது.
20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் பிரெட்லீக்கு அடுத்தபடியாக `ஹாட்ரிக்' சாதனை செய்த 2-வது வீரர் ஓரம் ஆவார்.
தொடர்ந்து அடுத்த 3 பந்துகளில் இலங்கை அணி 4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது மலிங்கா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி `திரில்' வெற்றியை ருசித்தது.