செயின்ட் லூசியாவில் நேற்று நடைபெற்ற இந்திய-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி மழை காரணமாக குறைந்த ஓவர் போட்டியானது. இதில் மேற்கிந்திய அணி 27 ஓவர்களில் 186/7 என்ற ஸ்கோரை எட்டியது. இந்திய அணிக்கு 22 ஓவர்களில் 159 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தோனியின் அபார ஆட்டத்தினால் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்படும்போது எந்த அணி வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆனால் டெய்லர் வீசிய அந்த கடசி ஓவரின் 2-வது பந்தை தோனி மிட் விக்கெட்டிற்கு மேல் அசாத்தியமான சிக்சர் ஒன்றை அடிக்க இலக்கு எளிதாக முடிந்தது.
27 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம் மீண்டும் மழையால் இடையூறு ஏற்பட இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 22 ஓவர்களில் 159 ரன்களாக குறைக்கப்பட்டது.
கார்த்திக்கும் கம்பீரும் 12 ஓவர்களில் 84 ரன்களை சேர்த்தனர். இதில் கம்பீர் 2 பவுண்டாரிகள் மட்டுமே அடித்து 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். கார்த்திக் அபாரமான முறையில் விளையாடி 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 47 ரன்களை விளாசினார்.
ஆனால் கம்பீரும், யுவ்ராஜ் சிங்கும் (2 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா 17 ஆவது ஓவரில் 117/3 என்று சற்றே தடுமாற்றம் அடைந்தது. அதன் பிறகு தோனி, ரோஹித் ஷர்மா (11) ஆகியோர் ஸ்கோரை 23 பந்துகளில் 31 ரன்களை எடுத்தனர். 148 ரன்களாக இருந்த போது ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்தார்.
ஆனால் தோனி கடைசி வரை நின்று ஆடி ஒன்று இரண்டு என்று ரன்களை சேர்த்த போதும் 2 பவுண்டரி மற்றும் கடைசி ஓவரில் அடித்த மிக முக்கிய சிக்சர் ஆகியவற்றுடன் 34 பந்துகளில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக பூவா தலையா வென்ற இந்தியா முதலில் மேற்கிந்திய அணியை பேட் செய்ய அழைத்தது.
கிறிஸ் கெய்ல் வழக்க்ம் போல் ஏதோ ரயிலை பிடிக்கவேண்டும் என்பது போல் விளாசலில் இறங்கினார். பின்னங்காலை சற்றே இடது புறமக நகர்த்தி நேராக நின்று கொண்டு ஆன் சைடிலோ, ஆஃப் சைடிலோ பந்துகளை விளாசி இஷாந்திற்கும், நெஹ்ராவிற்கும் கடும் நெருக்கடிகளை கொடுத்தார். 14 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த அவர்
நெஹ்ரா பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு சர்வாண், மார்டன் இணைந்தனர். இதில் சர்வாண் ஒன்று, இரண்டு என்று ரன்களை சேர்க்கத் தொடங்கினார். அதன் பிறகு 5 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் எடுத்து 59 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். |