ஜூலை 8 ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியா 2-1 என்று வெற்றி பெறும் என்று கூறியுள்ள முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ ஒரு சிறந்த வீச்சாளர் என்றும் அணியில் தேர்வு செய்தால் உறுதியாக அவர் சிறப்பான பங்களிப்பைச் செய்வார் என்றும் கூறியுள்ளார்.
"கடந்த ஆஷஸ் தொடரில் விளையாடிய பிரட் லீ தற்போது மற்றவர்களைக் காட்டிலும் 4 ஆண்டுகள் கூடுதல் பெற்ற வீரர், வாய்ப்பு கிடைத்தால் தன் அனுபவத்தை மிகவும் பயனுள்ள வகையில் அணிக்காக அவர் பயன்படுத்துவார்.
அவருக்கு இங்கிலாந்தில் விளையாடுவது விருப்பமானது, மேலும் அவர் வரலாறு அறிந்தவர் இதனால் ஆஷஸ் தொடர் அணியில் இருப்பது என்றால் அது எதற்காக என்பதை அவர் நன்கு அறிந்திருப்பார், இதனால் அவர் சிறப்பாக விளையாடுவதில் முனைப்புக் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் பிரட் லீ உடல் தகுதி அளவில் நன்றாக உள்ளார், உறுதியுடன் இருக்கிறார், திறமையை நிரூபிக்க ஆவலுடன் உள்ளார், இவரிப்போலவே அதிக முனைப்பு காட்டி வரும் இன்னொரு வீச்சாளர் ஸ்டூவர்ட் கிளார்க்" என்று கூறியுள்ளார் கில்கிறிஸ்ட்.
பிரட் லீ-யை அணியில் தேர்வு செய்திருக்கக்கூடாது என்று கூறுவதெல்லாம் சற்று அதிகப்படியான கருத்துகள்தான் என்று கில்கிறிஸ்ட், பிரட் லீ-யிற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
இந்த ஆஷஸ் தொடர் முடிவுகள் கணிக்கப்பட முடியாத ஒன்றாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்காவில் இதே அணி பெற்ற வெற்றியை வைத்துப் பார்க்கும்போது ஆஸ்ட்ரேலியா 2- 1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்று கூறியுள்ளார் கில்கிறிஸ்ட். |