இலங்கை அணியின் விசித்திர பந்து வீச்சு முறை கொண்ட வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு 20- 20 கிரிக்கெட் தொடரில் விளையாட டாஸ்மேனியா அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே டிவைன் பிராவோ விக்டோரியா அணிக்கும், அதிரடி சூரர் கிறிஸ் கெய்ல் மேற்கு ஆஸ்ட்ரேலியா அணிக்கும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மலிங்கா 3-வது அயல் நாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அயல் நாட்டு வீரர்கள் இருவரை ஒப்பந்தம் செய்ய மாகாண அணிகளுக்கு அனுமதியளித்துள்ள ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு அணிக்கும் 50,000 ஆஸ்ட்ரேலிய டாலர்களையும் நிதியுதவியாக அளித்துள்ளது.
25-வயதான மலிங்கா தனக்கென்ற தனிச்சிறபான பந்து வீச்சு பாணியை கடைபிடிப்பவர். ஆஸ்ட்ரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சனை நினைவூட்டும் இவரது பந்து வீச்சு 20- 20 கிரிக்கெட் தொடரில் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இது வரை 15 சர்வதேச 20- 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மலிங்கா 19 விக்கெட்டுகளை ஓவருக்கு 7.37 ரன்கள் என்ற சிக்கன விகித அடிப்படையில் வீழ்த்தியுள்ளார்.
இவர் டாஸ்மேனியா அணிக்காக 20- 20 கிரிக்கெட்டில் விளையாட இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹோபார்ட் வருகிறார்.
|