2005ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்ததற்கு பயிற்சியாளர் ஜான் புக்கானன் செய்த தவறுகளே காரணம் என்று ஆஸ்ட்ரேலிய முன்னாள் நடு வரிசை வீரர் டேமியன் மார்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
"வார்ன், மெகில் ஆகியோரது கருத்துக்கள் சரியானதுதான், அப்போது அணியில் இருந்த வீரர்கள் அனைவரும் இதனை ஒப்புக் கொள்வார்கள். அணியின் பயிற்சி நிர்வாகம் ஆஷஸ் தொடருக்கு சரியான திட்டமிடல் செய்யவில்லை. பிரிஸ்பேனில் அவதி அவதியாக ஒரு தயாரிப்புப் பயிற்சி செய்தோம், பிறகு வங்கோம், சென்றோம்" என்று விஸ்டன் கிரிக்கெட்டர் இதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார் டேமியன் மார்டின்.
ஆஷஸ் தொடரில் அப்போது பெற்ற தோல்விக்கு சரியான தயாரிப்பில்லை, திட்டமிடல் இல்லை என்பது பின்னணியுள்ள லட்ச காரணங்களில் ஒன்று என்று கூறுகிறார் மார்ட்டின். ஆனால் இவை ஒரு போதும் வெளியில் வரப்போவதும் இல்லை என்கிறார் அவர்.
மேலும் அப்போது ஆஸ்ட்ரேலிய அணி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என்று அனைத்திலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த போது ஆஷஸ் தொடரும் பிற தொடர்களைப் போல் ஒன்றே என்று நினைத்தோம், ஆனால் இங்கிலாந்திற்கு அவர்களது வாழ்வு தொடர்பான பிரச்சனை எனவே நன்றாக தயாரித்துக் கொண்டார்கள். ஆனால் அதன் பிறகு ஒரு போதும் இங்கிலாந்து சரியாக விளையாடவில்லை என்று கூறினார் மார்டின்.
அந்த தொடரில் ஆஸ்ட்ரேலியா பல தவறுகளைச் செய்தது, ஆனால் இதெல்லாம் வெளியில் ஒரு நாளும் வரப்போவதில்லை என்று கூறிய மார்டின், அந்த தொடரில் முதலில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குறித்து ஜான் புக்கானன் '20 ஓவர் கிரிக்கெட் பற்றி கவலைப்படவேண்டாம்' என்று கூறியதாக தெரிவித்தார். ஆனால் அந்த போட்டியில் இங்கிலாந்து சரியாக விளையாடி ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது.
இது போன்று நிறைய தவறுகள், ஆனால் இவையெல்லாம் வெளியில் வரப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் டேமியன் மார்டின்.
நடப்பு ஆஸ்ட்ரேலிய அணி பற்றி கூறுகையில் இளம் நட்சத்திரங்களான பிலிப் ஹியூஸ், டேவிட் வார்னர் ஆகியோர் மீது சுமைகளை அதிகம் ஏற்றக்கூடாது என்றும் எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
|