மெல்போர்னில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2ஆம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய முதல் இன்னிங்ஸ் ரன் எண்ணிக்கையை காட்டிலும் 196 ரன்கள் குறைவாக பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
கேப்டன் ஸ்மித் 62 ரன்கள் எடுத்து மிகவும் வெளியே சென்ற பந்தை அனாவசியமாக தொட்டு ஆட்டமிழந்ததையடுத்து டீவிலியர்சும் பீட்டர் சிடில் வீசிய அபாரமான பந்தில் பௌல்டு ஆனார்.
மார்க் பௌச்சர் 3 ரன்கள் எடுத்து நேதன் ஹாரிட்ஸ் பந்தில் ஸ்வீப் செய்ய முயன்று கேட்ச் கொடுத்தார்.
அதன் பிறகு டுமினியும், மோர்னி மோர்கெலும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 43 ரன்களைச் சேர்த்தனர். மோர்கெல் 21 ரன்கள் எடுத்து மிட்செல் ஜான்சன் பந்தில் பௌல்டு ஆனார்.
ஆட்ட நேர முடிவில் டுமினி 34 ரன்களுடனும் பால் ஹேரிஸ் 8 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்ட்ரேலிய அணியில் சிடில் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன், ஹாரிட்ஸ் முறையே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிரட் லீ விக்கெட் எடுக்காததோடு 13 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். |