மெல்பர்னில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-தென் ஆப்பிரிக்கா அணீகளுக்கு இடையிலான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலியா தன் முதல் இன்னிங்சில் 394 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேல் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஸ்மித் 62 ரன்கள் எடுத்து சிடில் பந்தில் சற்று முன் ஆட்டமிழந்தார்.
முன்னதாக 280/6 என்று களமிறங்கிய ஆஸ்ட்ரேலிய அணி கிளார்க், பிரட் லீ மூலம் மேலும் 42 ரன்களைச் சேர்த்தது. 21 ரன்கள் எடுத்திருந்த பிரட் லீ அதில் 5 பவுண்டரிகளை அடித்திருந்தார். ஆனால் ஸ்டெய்ன் பந்தில் காலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதே ஓவரில் மிட்சல் ஜான்சன் விக்கெட்டையும் ஸ்டெய்ன் பௌல்டு செய்து வீழ்த்தினார். ஜான்சன் ரன் எதுவும் எடுக்கவில்லை. கடைசியாக நேதன் ஹாரிட்ஸ் 12 ரன்களையும், பீட்டர் சிடில் 19 ரன்களையும் எடுத்து மைக்கேல் கிளார்க்கிற்கு ஆதரவளித்தனர். கிளார்க் 88 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டெய்ன் 5 விக்கெட்டுகளையும், நிடினி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸை வீழ்ச்சியுடன் துவங்கியது. 2-வது ஓவரில் பீட்டர் சிடில் வீசிய அபாரமான பந்தில் மெக்கன்சி பௌல்டு ஆனார்.
அதன் பிறகு அம்லா களமிறங்கி சற்றே ரன் வேகத்தை கூட்டுமாறு ஆடினார். ஆனால் அவரும் 19 ரன்கள் எடுத்திருந்தபோது ஜான்சன் பந்தை அனாவசியமாக கட் செய்ய முயன்று சைமன்ட்சின் மகத்தான கேட்சிறு ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு காலிஸும், ஸ்மித்தும் ரன் எண்ணிக்கையை 102ற்கு உயர்த்தினர். அப்பொது 26 ரன்கள் எடுத்திருந்த காலிஸ் நேதன் ஹாரிட்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
கடைசியாக 62 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித், பிராட் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து பீட்டர் சிடிலின் 2ஆவது விக்கெட்டாக வீழ்ந்தார்.
டீவிலியர்ஸ் 6 ரன்களுடனும் டுமினி 4 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். |