தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக மெல்பர்னில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவில் ஆஸ்ட்ரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் பூவா-தலையா வென்ற ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. துவக்க வீரர் மேத்யூ ஹைடன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவர் பாண்டிங், மற்றொரு துவக்க வீரர் கேட்டிச் உடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். இதில் கேட்டிச் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாண்டிங், டெஸ்ட் அரங்கில் தனது 36வது சதத்தை பூர்த்தி செய்து, 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிவடைய ஒரு சில பந்துகளே இருந்த நிலையில், பிராட் ஹட்டின் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மைக்கேல் கிளார்க் 36 ரன்களுடன் இருந்தார். இதையடுத்து பிரெட்லீ களமிறங்கி, 3 பந்துகளை மட்டும் சந்தித்திருந்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தென்ஆப்ரிக்க பந்து வீச்சாளர்கள் தரப்பில் ஸ்டெய்ன், நிடினி தலா 2 விக்கெட்டுகளும், மோர்கெல், ஹாரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர். |