மெல்போர்னில் இன்று துவங்கிய ஆஸ்ட்ரேலிய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் பாண்டிங் 127 பந்துகளில் 101 ரன்களை அதிரடி முறையில் எடுத்தார். ஆஸ்ட்ரேலியா சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது.
ஆஸ்ட்ரேலிய அணியில் ஜேசன் கிரேஜாவிற்கு பதிலாக மற்றொரு ஆஃப் ஸ்பின்னர் நேதன் ஹாரிட்ஸ் இடம்பெற்றுள்ளார்.
பூவாதலையா வென்ற ஆஸ்ட்ரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. மேத்யூ ஹெய்டனின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. அவர் 8 ரன்கள் எடுத்து மகாயா நிடினி பந்தில் 9ஆவது முறையாக ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு பாண்டிங் களமிறங்கி, கேடிச்சுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உணவு இடைவேலையின் போது 89 ரன்களாக உயர்த்தினார். கேடிச் மீண்டும் அபாரமாக விளையாடி தனது அரை சதத்தை எடுத்து முடித்தார் பாண்டிங் 27 ரன்களுடன் விளியாடினார்.
ஆனால் உணவு இடைவேளைக்கு சற்று முன் டேல் ஸ்டெய்ன் பந்தை பாண்டிங் டிரைவ் செய்ய முயல அது 3-வது ஸ்லிப்பிற்கு கேட்சாக சென்றது. அங்கு அதனை மெக்கன்சி கோட்டை விட்டார். காலிஸ் அப்போது பெவிலியனில் இருந்ததால் மெக்கன்சி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகது.
அதன் பிறகு பாண்டிங் மகாயா நிடினியை 3 அபாரமான பவுண்டரிகள் அடித்து அரைசதத்தை எடுத்தார்.
அரைசதம் எடுத்த பிறகு அடுத்த 40 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து தனது 37வது சதத்க்டை எட்டினார் பாண்டிங்.
இடையே சைமன் கேடிச் ஸ்டெய்ன் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். அவர் எடுத்த ரன்கள் 54. மைக் ஹஸ்ஸி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டெய்ன் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பிறகு தேனீர் இடைவேளைக்கு சற்று முன் 127 பந்துகளில் 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் அதிரடியாக விளையாடிய ரிக்கி பாண்டிங் பால் ஹேரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.
தற்போது கிளார்க் 17 ரன்களுடனும், சைமன்ட்ஸ் 22 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். ஆஸ்ட்ரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. |