இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இடைக்கால நிர்வாகக் குழுவை இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் காமினி லொகுகே கலைப்பதாக அறிவித்தார்.
அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் வரையில் இலங்கை விளையாட்டுதுறைச் செயலர் லியானகாமா நிர்வாகப் பொறுப்புகளை கவனித்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"அர்ஜுனா ரணதுங்கா வீரர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் சரியான முறையில் ஒத்துழைப்பு வழங்கவில்லை, இதனை சரி செய்ய முயன்றோம் ஆனால் முடியவில்லை இதனால் ரணதுங்கா நிக்கப்பட்டார்" என்று லொகுகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அடுத்து தேர்தல் நடத்தப்படுமா அல்லது மற்றொரு இடைக்கால குழு நியமிக்கப்படுமா என்பது பற்றி இனிமேல்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் 16 ஊழியர்களை ரணதுங்க பணி நீக்கம் செய்ததுதான் இந்த பிரச்சனையின் அடிப்படை. இந்த முடிவை ரணதுங்கா தன்னிசையாக எடுத்துள்ளார் என்றும், அவரை நிர்வாககுழுவின் தலைவராக நியமிக்கப்படும்போதே ஒவ்வொரு நடவடிக்கையையும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில்தான் எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின் இந்த முடிவை ஏற்பதாகக் கூறிய ரணதுங்கா, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நன்மைக்கும், வீரர்களுக்கு சேவையையளிக்கும் எண்ணத்துடன் தான் இதனை செய்ததாக கூறினார்.
அர்ஜுனா ரணதுங்கா நேற்று இலங்கை அதிபர் ராஜ பக்சேயை சந்தித்ததாகவும், விரைவில் ரணதுங்காவிற்கு அமைச்சர் பதவி ஒன்று கிடைக்கும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் ஊகிக்கின்றன. |