மொஹாலியில் நடந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது.
போட்டியின் இறுதிநாளான இன்று, கம்பீர்-யுவராஜ் இணை 2வது இன்னிசை தொடர்ந்தது. இதில் இருவருமே சிறப்பாக விளையாடி அரைசதம் பூர்த்தி செய்ததுடன், அதிரடியாக சதத்தை நோக்கி முன்னேறினர். எனினும், கம்பீர் 97 ரன்கள், யுவ்ராஜ் 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வெற்றி பெற 403 ரன்கள் தேவை என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே சரிவைச் சந்தித்தது. அலிஸ்டர் குக் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய இயான் பெல், துவக்க வீரர் ஸ்ட்ராஸ் உடன் இணைந்து பொறுப்பாக விளையாடி விக்கெட் சரிவைத் தடுத்தார். அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்த போது 5ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்ததால் போட்டி டிராவில் முடிந்தது.
கடைசி ஓவரை வீசினார் தோனி: மொஹாலி டெஸ்ட் டிராவில் முடிவடைவது உறுதியாகிவிட்ட நிலையில், இன்றைய போட்டியின் கடைசி ஓவரை கேப்டன் தோனி வீசினார். அப்போது லக்ஷ்மண் விக்கெட்-கீப்பராக செயல்பட்டார்.
ஆட்டநாயகன் கம்பீர்: இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 179 ரன்களும், 2வது இன்னிங்சில் 97 ரன்களும் குவித்த இந்திய அணியின் துவக்க வீரர் கௌதம் கம்பீருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர் நாயகன் ஜாகீர்கான்: இதேபோல் சென்னை, மொஹாலி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர்கானுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. |