மொஹாலியில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது இறுதி டெஸ்ட் போட்டியின் 5ஆம் நாளான இன்று இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்திற்கு 402 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று இன்னமும் 44 ஓவர்களே மீதமுள்ளன.
உணவு இடைவேளையின் போது 216/4 என்று துவங்கிய இந்திய அணி கம்பீர், யுவ்ராஜ் சதத்தை கருத்தில் கொண்டு டிக்ளேர் செய்வதை தள்ளிப் போட்டது. ஆனால் இருவரும் சதம் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
முதலில் யுவ்ராஜ் சிங் 86 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இவர் 93 பந்துகளை சந்தித்து 6 பவுண்டர்களையும் 4 சிக்சர்களையும் அடித்து ஆட்டமிழந்தார். கம்பீரும், யுவ்ராஜும் இணைந்து 5-வது விக்கெட்டிற்கு 153 ரன்களை 29 ஓவர்களில் சேர்த்தனர்.
கேப்டன் தோனி வந்தவுடனேயே ரன் எதுவும் எடுக்காமல் பனேசர் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹர்பஜன் சிங் களமிறங்கி ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்தபோது கவுதம் கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஸ்வான் பந்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சிலும் சதம் என்ற அரிய வாய்ப்பை கோட்டை விட்டார் கம்பீர்.
இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஸ்வான், பனேசர் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
44 ஓவர்கள் மீதமிருக்கையில் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. |