இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் துவக்கத்திலேயே பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதன் மர்மம் குறித்து ஆஸ்ட்ரேலிய அணியினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ரிவர்ஸ் ஸ்விங் செய்ய பந்தை சேதப்படுத்தும் முறையற்ற விதங்கள் நீங்கலாக, முறையான விதத்தில் துவக்க ஓவர்களிலேயே பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்யும் மர்மம் என்ன என்பதை ஆஸ்ட்ரேலிய அணியினர் இந்திய வீச்சாளர்கள் வீசும் முறையை வீடியோ மூலம் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்ட்ரேலிய ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி கட்டுரையில் ஆஸ்ட்ரேலிய துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் கருத்து கூறுகையில், ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்கள் இந்த ரிவர்ஸ் ஸ்விங் முறையை இந்திய வீச்சாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதாவது ஆட்டத்தின் 10-வது ஓவரிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது. இது எவ்வாறு சாத்தியம் என்று தாங்கள் கண்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, பொதுவாக புதிய பந்தின் தையல் பகுதியை நேராக பிடித்து சாதாரண முறையில் ஸ்விங் செய்வதுதான் வேகப்பந்து வீச்சாளர்களின் வழக்கம். பிறகு 40 ஓவர்கள் சென்ற பிறகு பந்தின் மேல் தோல் மென்மையானவுடன் ஒரு பக்கத்தை மட்டும் பளபளப்பேற்றி ரிவர்ஸ் ஸ்விங் செய்வதுதான் வழக்கம்.
ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் துவக்கத்தில் 5 அல்லது 6 ஓவர்களை பந்தின் தையலை குறுக்காக பிடித்து வீசுகின்றனர். இதனால் பந்தின் ஒரு பக்கம் மென்மையடைந்து ஒரு பக்கம் பளபளப்பு தக்கவைக்கப்படுகிறது. இதனால் 10ஆவது ஓவரிலேயே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்று வீடியோ பதிவுகளில் ஆஸ்ட்ரேலிய அணி வீரரகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவில் பயன்படுத்தபடும் குக்காபரா பந்துகள் எளிதில் மென்மையடையாது, இந்தியாவில் வீசப்படும் எஸ்.ஜி. பந்துகளில் தையல் பகுதி அகலமாக இல்லாமல் குறுகலாக இருக்கும், இதனால் இப்பந்துகள் விரைவில் மென்மையாகிவிடும். ஆனாலும் 40 ஓவர்களுக்கு குறைந்து ரிவர்ஸ் ஸ்விங் செய்வது இயலாத காரியம் என்றே நிபுணர்கள் கருதி வந்தனர். அதனை தற்போது இஷாந்த் ஷர்மாவும், ஜாகீர் கானும் முறியடித்துள்ளனர்.
ராஜஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு, ஆஸ்ட்ரேலியர்களுக்கு பயிற்சி செய்ய சகலவிதமான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது சர்ச்சையை கிளப்பிய போதும், மணிக்கணக்காக இந்திய வீரர்களின் ஆட்டம் பற்றிய வீடியோ பதிவுகளை பார்த்து உத்திகளை வகுத்தபோதும் இந்திய பந்து வீச்சாளர்களின் இத்தகைய புதிய அணுகுமுறையையும், உத்திகளையும் கிரேக் சாப்பலால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆஸ்ட்ரேலிய இணையதளத்தில் வெளியான அந்த பத்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் இத்தகைய புதிய வித்தையை கண்டுபிடித்துள்ளதாக கூறிய மைக்கேல் கிளார்க், "இந்த விஷயத்தை நான் கற்றுக் கொண்டேன், இதனை எனது முதல் இந்திய சுற்றுப்பயணத்தில் கூட நான் காணவில்லை, பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்பது எனக்கு தெரிந்தாலும், எப்படி இவ்வளவு விரைவில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்பதை நாண் காணத்தவறி விட்டேன், இப்போது தெரிந்துள்ளது அதன் ரகசியம், இதனால் டெல்லி, நாக்பூர் டெஸ்ட்களில் இந்த புதிய அணுகுமுறையை பயன்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.
ஆஸ்ட்ரேலிய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் டிராய் கூலி, ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சின் மேதை என்று வர்ணிக்கப்படும் இவர் கூட இந்திய பந்து வீச்சாளர்களின் இத்தகைய புதிய உத்தியை கண்டுபிடிக்காமல் இருந்தது பெரிய தர்ம சங்கடம்தான் என்று இந்த ஆஸ்ட்ரேலிய ஊடக செய்திக் கட்டுரை ஆச்சரியமடைந்துள்ளது. |