டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்த எனது சாதனையை முறியடிக்க சச்சின் டெண்டுல்கர் பொருத்தமானவர் என வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். ஆஸ்ட்ரேலியா தலைநகர் கான்பராவில் உள்ள விளையாட்டு மையத்தை பார்வையிட்ட பின்னர் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், எனது சாதனையை (11,953 ரன்கள்) சச்சின் முடியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.எனது சாதனையை முறியடிக்க அவரை (சச்சின்) விட பொருத்தமான வீரர் யாரும் இருக்க முடியாது. கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த சாதனைப் பெற தகுதியானவர்தான். அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கைக்கும் எனது வாழ்த்துக்கள் என்று சச்சினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் லாரா. கடந்த 2006இல் ஓய்வுபெறும் போதே எனது சாதனை நிச்சயம் முறியடிக்கப்பட்டுவிடும் என்று கணித்திருந்தேன். ஆலன் பார்டர் சாதனையை நான் முறியடித்த தருணம் என் வாழ்நாளின் மகிழ்ச்சியானது எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது சச்சின் எனது சாதனையை முறியடித்துள்ளார். கவாஸ்கர், பார்டர் தற்போது சச்சின் ஆகியோர் வரிசையில் நானும் இடம்பெற்றிருப்பது மிகுந்த கவுரமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சச்சினை பாண்டிங் முந்துவார்: சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை ஆஸ்ட்ரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் முறியடிப்பார் என்று தாம் நம்புவதாக லாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போதைய சூழலில் சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு பாண்டிங்கிற்கு பிரகாசமாக உள்ளது. அவர் (பாண்டிங்) ஓய்வுபெறுவதற்கு முன் இன்னும் 30 முதல் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கிறேன். இன்றைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாண்டிங் 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார். |
தேடல் தொடர்பான தகவல்கள் |