இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கான புதிய விளையாட்டு மைதானம் நாக்பூரில் தயார் நிலையில் உள்ளது.
நாக்பூர்-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் 33 ஏக்கர்கள் நிலப்பரப்பில் இந்த புதிய விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இது நாக்பூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
விதர்பா கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சஷான்க் மனோகரும் திட்டமிட்ட இந்த விளையாட்டு மைதானத்தில் 45,000 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளை பார்வையிடலாம்.
கார்ப்பரேட் மட்ட பார்வையாளர்களுக்காக முழுதும் குளிரூட்டப்பட்ட 15 இருக்கைகள் கொண்ட அறை இதில் உள்ளது. இதில் அமர்ந்து பார்வையிட ரூ.3 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதர்பா கிரிக்கெட் சங்கம் தனது உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் போட்டியை பார்வையிட வசதியாக 1,200 இருக்கைகள் கொண்ட முழுதும் குளிரூட்டப்பட்ட அறை ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
ஊடகங்களுக்கென்றே பிரத்யேக தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அறை ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 200 பத்திரிகையாளர்கள் அமரலாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செய்தி மையம் வை-ஃபை தொழில் நுட்பத்துடன் கூடிய கணினி வசதிகளை கொண்டது.
அதேபோல் அணித் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க பிரத்யேக அறை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
ரூ.90 கோடி செலவில் இந்த விளையாட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளதாக விதர்பா கிரிக்கெட் சங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
4வது இறுதி டெஸ்ட் இந்த புத்தம் புதிய மைதானத்தில் நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெறுகிறது. |