மொஹாலி டெஸ்டில் கிரிக்கெட்டின் அனைத்துத் துறைகளிலும் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய அணி மீது ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் கடும் தாக்குதல் விமர்சனம் வைத்துளன.
"ஆதிக்க காலம் முடிவடைகிறது" என்று ஒரு பத்திரிக்கை எழுதியுள்ளது. கிரிக்கெட் குறித்து தொடர்ந்து சீரிய முறையில் எழுதிவரும் பீட்டர் ரூபக், தோனியா, பாண்டிங்கா என்றால் தோனியே சிறந்து விளங்கினார் என்ற தொனியில் எழுதியதோடு, அணித் தலைமைத் திறன் முதல் பேட்டிங், பந்து வீச்சு, ஃபீல்டிங் என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியா ஆஸ்ட்ரேலியாவை தலை குனிய வைத்து விட்டது என்று அவர் தன் பத்தி ஒன்றில் எழுதியுள்ளார்.
இந்திய டெஸ்ட் வெற்றி வரலாற்றில் 320 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை ஈட்டி இந்திய அணி சாதனை புரிந்தது.
மொஹாலி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸ் துவக்கத்தில் மேத்யூ ஹெய்டன் அதிரடி முறையில் ஆடியது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இயன் சாப்பல் அந்த இன்னிங்ஸ் பற்றி குறிப்பிடுகையில் 515 ரன்கள் இலக்கை 50 ஓவர்களில் அடித்து முடிப்பது போல் அவர் துவங்கினார். ஆனால் அதிரடி துவக்கத்திற்கு பிறகு நிதானப்போக்கை கடைபிடித்திருக்கவேண்டும் என்றார். அவர் தான் ஆட்டமிழந்ததோடு, சைமன் கேடிச்சையும் தன்னுடனே அழைத்துச் சென்றார் என்று கேலி செய்தார்.
மொஹிந்தர் அமர்நாத் ஹெய்டனின் அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸ் பற்றி கூறுகையில், எப்படியாவது தனது ஆட்டத்தை மீட்க வேண்டும் என்ற தீவிரம்தான் தெரிந்ததே தவிர அது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டமல்ல என்றார்.
தி ஆஸ்ட்ரேலியன் என்ற பத்திரிக்கை " இந்தியாவின் எழுச்சியும், பாண்டிங் அணியின் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் ஆஸ்ட்ரேலிய அணியின் ஆட்டத்தை சாடியுள்ளது.
ஆஸ்ட்ரேலிய வானொலி நிலையத்தின் கிளென் மிட்செல் தனது பத்தியில், "இந்த டெஸ்ட் போட்டியில், இந்தியாவிற்கு இணையாக ஆஸ்ட்ரேலியாவை குறிப்பிட ஒரு பகுதி கூட இல்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் பல பத்திரிக்கைகள் தோல்வி பிரச்சனையல்ல என்றும் தோற்ற விதம் மோசமானது குறித்து கடுமையாக சாடியுள்ளன.
மேலும் ஆஸ்ட்ரேலியாவின் பேட்டிங் அணுகுமுறையை மோசமானது என்று வர்ணித்துள்ள பெரும்பாலான பத்தியாளர்கள், இந்திய பந்து வீச்சை புகழ்ந்து கூறியுள்ளனர்.
இன்னும் பல ஊடகங்கள் ஓய்வு பெற்ற ஷேன் வார்ன் மீண்டும் பந்து வீச வந்தால் நல்லது என்று எழுதியுள்ளன.
ஆனால் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியோ, ஆஸ்ட்ரேலிய அணி மீண்டும் எழுச்சியுறும், எனவே தொடரை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறியுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் இம்மாதம் 29-ம் தேதி துவங்குகிறது. |