பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸீலாந்து கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 17ஆம் தேதி சிட்டகாங் நகரில் துவங்க இப்போட்டியில், பூவா-தலையா வென்ற பங்களாதேஷ் முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்சில் பங்களாதேஷ் அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மெஹ்ராப் ஹொசைன் அதிகபட்சமாக 83 ரன்களும், முஷிபுர் ரஹ்மான் 79 ரன்களும் குவித்தனர்.நியூஸீலாந்து பந்துவீச்சாளர்களில் அணித்தலைவர் டேனியல் வெட்டோரி 5 விக்கெட்டும், பிரையன் 3 விக்கெட்டும், ஜே.எஸ்.படேல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து முதல் இன்னிங்சைத் துவக்கிய நியூஸீலாந்து அணி, பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 171 ரன்களுக்கு சுருண்டது. அணித்தலைவர் வெட்டோரி அதிகபட்சமாக 55 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களில் ஷகிப் அல்-ஹஸன் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்துர் ரஸாக், மொஹம்மத் அஷ்ரஃபுல், நயீம் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். நியூஸீலாந்தை விட 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய பங்களாதேஷ், 242 ரன்கள் குவித்தது. ஷகிப் அல்-ஹஸன் அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். நியூஸீலாந்து தரப்பில் வெட்டோரி 4 விக்கெட்டும், பிரையன், ஜே.எஸ்.படேல் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.வெற்றி பெற 317 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய நியூஸீலாந்து அணி, துவக்க வீரர் ரெட்மான்ட் (79 ரன்கள்), அணித்தலைவர் வெட்டோரி (76 ரன்கள்) ஆகியோரது சிறப்பான பங்களிப்பால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.பங்களாதேஷ் தரப்பில் அப்துர் ரஸாக் 3 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹஸன் 2 விக்கெட்டும் மோர்ட்சா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இப்போட்டியில் 131 ரன்கள் குவித்ததுடன் 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய நியூஸீலாந்து அணித்தலைவர் வெட்டோரி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில், 1-0 என்ற போட்டிக் கணக்கில் நியூஸீலாந்து முன்னிலை பெற்றுள்ளது. |
தேடல் தொடர்பான தகவல்கள் |