இந்திய அணிக்கு எதிராக மொஹாலியில் நடந்து வரும் 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
நேற்றைய 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் என்ற நிலையில், கிளார்க் 42 ரன்களுடனும், ஹெட்டின் 37 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்றைய 5-வது மற்றும் இறுதிநாள் ஆட்டத்தை ஆஸ்ட்ரேலியா அணி தொடர்ந்தது. அந்த அணியின் ஹேடின் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஜாகீர்கான் வேகத்தில் ஸ்டெம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஒயிட் ஒரு ரன், பிரெட் லீ ரன் எதுவும் எடுக்காமலும் வந்த வேகத்தில் அவர்களும் ஜாகீர்கானின் புயல்வேக பந்துவீச்சில் அவுட்ஆகி பெவிலியன் திரும்பினர்.
இதைத்தொடர்ந்து ஆஸ்ட்ரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டது.
முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி 469 ரன்களும், ஆஸ்ட்ரேலிய அணி 268 ரன்களும் எடுத்துள்ளது. 2-வது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து ஆஸ்ட்ரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 516 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. |